இருசக்கர மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகையை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்துக்கொள்ளும் நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையிருந்தது. நாம் அதை விரும்பிச் செய்யவில்லை. ஆனால் சில நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காகவே எமது விருப்பதற்திற்கு மாறாக செயற்படவேண்டியிருந்தது. 

இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலைதொடர்பாகவும் நாம் அறிந்திருந்தோம். தற்போது நாம் பொதுமக்களுக்கு  எவ்வாறு வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்கலாம் என ஆலோசித்து வருகின்றோம். 

அதற்கமைய பொருளாதார ரீதியாக  நிவாரணம் வழங்கும் முகமாக முச்சக்கர வண்டி மற்றும் இருசக்கர ஓட்டுநர்களுக்காக எரிபொருள் சந்தையில் புதிய பெற்றோல் வகையை அறிமுகப்படுத்தவுள்ளோம். 

இது தொடர்பாக பல பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

மேலும் புதிய பொறியியலாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் எனக்கு முக்கியமில்லை இவர்கள் எப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று. எனக்கு வக்களித்தவர்களா இல்லையா என்று. நான் மனிதவள முகாமைத்துவ பிரிவுக்கு தெரிவித்ததாவது இந்த நாட்டில் இருக்கும் நல்ல திறமையான பொறியியலாளர்களை தேர்வுசெய்து தரவேண்டும் என்று. நான் இந்த புதிய உத்தியோகத்தர்களிடம் விடுக்கும் வேண்டுகோளானது எனக்கு இந்த நிறுவனத்தை பாதுகாக்க உதவமாறு.

இதேவைளை, இங்கு உரையாற்றிய பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவிக்கையில்,

'இன்று நியமனம் பெறும் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலைசெய்வது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிறுவனத்தில். உலகத்தில் பல நாடுகளில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. 

ஆனால் எமது நாட்டில் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் 50 வருடங்கள் பழமையானது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து நடாத்திச்செல்வதற்கு காரணம் எம்மிடம் உள்ள சிறந்த திறமையான பொறியியலாளர்களினாலேயே. புனரமைப்பு பணிகளுக்காக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நாங்கள் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளை நிறுத்துவோம். 

இதனை கடந்த காலத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தோம். எதிர்காலத்தில் உங்களது யோசனைகளுடனும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடனும் இந்த நிறுவனத்தை அபிவிருத்தி செய்யவுள்ளோம் இதற்கு உங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்' என்றார்.

இந்நிகழ்வில், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க, கூட்டுத்தாபனத்தின்  பணிப்பாளர் நீல் ஜயசேகர மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது,