விசேட நீதியொதுக்கீட்டின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தை தேவைக்குட்பட்ட மாவட்டமாக கருதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பூநகரி பிரதேச சபைகளின் சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளனர்.

நேற்று கிளிநொச்சிக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டபோதே சுயேச்சைக்குழுவின் 19 உறுப்பினர்களும் மனுவில் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்டம் யுத்த பாதிப்புக்களை அதிக சுமந்த மாவட்டத்தில் ஒன்றாகும். இங்கு மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அரசின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  ஆனாலும் எமது மாவட்டத்தின் தேவையினை வருடாந்த வரவு -செலவு திட்ட நிதியொதுக்கீடு மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியாதுள்ளது. 

எனவேதான் நாம் தங்களிடம் வேண்டிக்கொள்வது கிளிநொச்சி மாவட்டத்தினை விசேட தேவைக்கு உட்பட்ட மாவட்டமாக கருதி, விசேட நிதியொதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.