(இரோஷா வேலு) 

வெலிமட பெலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகெதர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கண்டியை சேர்ந்த 40 வயதுடைய கணவனும், 35 வயதுடைய மனைவியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

போதைப்பொருள் வியாபாரம் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது  சந்தேகத்திற்கிடமான லொறியொறை சோதனை செய்த பொலிஸார், லொறியின் சாரதியிடமிருந்து மூன்று ஹெரோயின் பக்கெட்டுக்களையும் அவருடன் இருந்த பெண்ணிடமிருந்து 18 ஹெரோயின் பக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். 

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்த பொலிஸார் அவர்கள் பயணித்த லொறியையும் கைப்பற்றியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது  சந்தேக நபர்கள் இலகு வழி பணக்கொடுப்பனவு முறையினூடாக (ஈஸி காஸ்) இவ் வியாபாரத்திற்கான பணமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.