செய்ன்ட் லூசியாவில் இடம்பெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி, தோல்வியின்றி முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது, 

முதல் இன்னிங்ஸில் 79 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந் நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவு அணி 300 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

போட்டியின் மூன்றாம் நாள் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஒன்பது ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அதனையடுத்து நான்காம் நாளான நேற்றுமுன்தினம் 34 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி ஆட்டநேர முடிவின் போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் 89 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இறுதி நாளான நேற்றைய தினம் 334 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி இரண்டு ஓவர்கள் மாத்திரமே தாக்குப்பிடித்தது. அதற்கிணங்க மொத்தமாக 342 ரன்னிளை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மேற்கிந்திய அணி சார்பில் சனோன் கேப்ரியல் 8 விக்கெட்டுக்களையும் கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.

295 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணி நேற்றைய இறுதி நாள் ஆட்ட நேர முடிவின்போது 60.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 5 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதனால் இப் போட்டியானது வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. 

மேற்கிந்திய அணி சார்பகா பிரத்வைட்  59 ஓட்டங்களையும் ஷாய்ஹோப் 39 ஓட்டங்களையும் ஜோசன் ஹோல்டர் 15 ஓட்டங்களையும் ரோஸ்டன் சேஸ் 13 ஓட்டங்களையும் கெய்ரன் பவல் 2 ஓட்டங்களையும் ஸ்மித் ஒரு ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இந் நிலையில் இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டித் தொடர் பார்படோஸிலுள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.