(இராஜதுரை ஹஷான்)

நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமா அல்லது இன்றுடன் நிறைவுக்கு கொண்டுவர வேண்டுமா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என தபால் ஊழியர் சங்க கட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாடுதழுவிய ரீதியில் பணி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள ஒன்றிணைந்த தபால் ஊழியர் தொழிற்சங்க  அமைப்பினர் இன்று  முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஆர்பாட்ட பேரணி இன்று காலை அஞ்சல்  தலைமையக காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் நாடுதழுவிய ரீதியில் உள்ள 22 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து தபால் மற்றும்  தொலைத்  தொடர்பு உத்தியோக சங்கத்தின் செயலாளர் ஏ.கே.காரியவசம் குறிப்பிடுகையில்.

நாடுதழுவிய ரீதியில் காணப்படுகின்ற தபால் நிலையங்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் என்ற விடயத்தினை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. 

ஆனால் அரசாங்கம் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற தன்மையினை எதிர்த்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.