இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களான ரோஷான் மஹானாம, குமார் சங்ககார, மஹேல ஜயவர்த்தன, மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையில் ஆலோசகர்களாக இணைந்து கொள்ளுமாறு கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தமையானது வரவேற்கத்தக்க விடயம் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

'சூதாட்டகாரர்கள் மற்றும் வியாபாரிகளின் கைகளில் அகப்படாமல் புத்திசாலித்தனமாக செயற்பட்ட சிரேஷ்ட கிரிக்கட் வீரர்களான  ரோஷான் மஹானாம, குமார் சங்ககார, மஹேல ஜயவர்த்தன, மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவிக்கின்றேன். 

சூதாடக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் தமது தேவைகளை பூர்த்திசெய்யவே வீரர்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இடம்பெறாமல் இருக்கவும் கிரிகெட்டை பாதுகாக்கவும் சரியான வழிமுறையை பயன்படுத்த வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இன்று கிரிக்கெட் நிர்வாக சபையில் உள்ள வியாபாரிகள் எமது சிரேஷ்ட வீரர்களின் பெயரைப் பயன்படுத்தி நிரந்தரமாக பதவியில் இருப்பதற்கு முயற்சிக்கின்றனர். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் ஒரு குழுவொன்றை நியமித்தார். 

ஆனால் ஒன்றுமே இடம்பெறவில்லை. தற்போதும் சிரேஷ்ட வீரர்களின் பெயர்களை முன்நிலைப்படுத்தி அவர்களின் பெயர்களை விற்க முயச்சிக்கின்றனர். இங்கு என்ன செய்யப் போகிறார்கள்? இது காலத்தை வீணாக்கும் செயலாகும். 

ஆனால் இன்று நான் மகிழ்ச்சியாக உள்ளேன் காரணம் புத்திசாலிகளான ரோஷான் மஹானாம, குமார் சங்ககார, மஹேல ஜயவர்த்தன, மற்றும் முத்தையா முரளிதரன் ஆகிய சிரேஷ்ட வீரர்கள் கிரிக்கட் சபையின் கோரிக்கையை நிராகரித்தமை தொடர்பாக. 

என்னைப் பொறுத்தவரை வீரர்களை யாரும் எதற்கும் பயன்படுத்தக்கூடாது. வீரர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கிரிக்கெட்டை கீழ்நிலைக்கு கொண்டு சென்றவர்களை கிரிக்கெட் சபைக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும். அதற்கான காலமும் வந்துவிட்டது. 

கடந்த காலத்தில் கிரிக்கெட்டில் பல தோல்விகளை நாம் சந்தித்தோம். இதில் எமது அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் நல்ல பாடமொன்றை கற்றுக்கொள்ளாவிட்டால் சூதாட்டக்காரர்களும் வியாபாரிகளும் கிரிக்கெட்டை நாசம் செய்யத அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயர் உருவாகும். வருகின்ற 2 வருடங்களில் கிரிக்கெட் அழிந்துவிடும் நிலையும் உருவாகும். அமைச்சராக உள்ள எனக்கும் இதில் பொறுப்பு இருக்கின்றது. நான் கிரிக்கெட்டின் நிலை தொடர்பாக எல்லாவற்றையும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தெரிவித்துவிட்டேன். இன்று நான் கவலையுடனே இதனையும் தெரிவிக்கின்றேன்.

நாங்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியிலேயே கிரிக்கெட்டை கட்டியெழுப்பினோம். ஆனால் இன்று கிரிக்கெட் கீழ்நிலையில் உள்ளது. தற்போது ஒரு அணியே உருவாகியுள்ளது கிரிக்கெட்டை கட்டியெலுப்ப.

நான் பத்திரிக்கைகளில் பார்த்தேன் 58 கிரிக்கெட் சங்கங்கள் தேர்தலை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இது யார் சொல்வது? இது திருடர்களே. அவர்கள் கடந்த காலத்தில் பணத்தினால் மேலே வந்தவர்கள். நாட்டு மக்கள் அவர்களிடமே கூச்சலும் சத்தமும் எழுப்பவேண்டும். எமது வீரர்களிடம் இல்லை. மக்கள் கிரிக்கெட்டை நாசம் செய்த கிரிக்கெட் நிர்வாகத்தினரிடமே கூச்சல் எழுப்பவேண்டும்'என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.