(நா.தனுஜா)

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கம்  எதிர்பார்த்துள்ள இலக்குகளை அடைவதற்கு பிரித்தானிய அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகாராணியாரின் பிறந்த தின வைபவத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கிடையிலான நல்லுறவு தொடர்பில் நாம் பெருமை கொள்வதுடன் பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் எமது நாட்டின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

அத்துடன் கல்வி மற்றும் கலாசார விடயங்கள் என்பன இருநாடுகளுக்கும் இடையில் பரிமாற்றம் செய்யப்படுவதுடன்  இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் ஆதரவு வழங்கி வருகிறது.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைப்பதற்கு இலங்கை பொலிஸ் சேவையுடன் இணைந்து செயற்படவுள்ளதோடு இலங்கையில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு அனைத்து பங்களிப்பயைும் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

எனவே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கம்  எதிர்பார்த்துள்ள இலக்குகளை அடைவதற்கு பிரித்தானிய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றார்.