சுவீடனும் தென் கொரியாவும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள கடுமையாக முயற்சிக்கவுள்ளன.

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண பீபா கால்பந்தாட்டப் போட்டிகளின் ஐந்தாம் நாளான இன்று மூன்று முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளன.

நடப்பு சம்பியன் ஜேர்மனியை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் குழு “எவ்”  போட்டியில் மெக்சிக்கோ வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக் குழுவுக்கான முதலாம் கட்ட கடைசிப் போட்டியில் சுவீடனும் தென் கொரியாவும் நிஸ்னி நொவ்கோரொட் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் முதல் தடவையாக சந்திக்கும் இந்த இரண்டு அணிகளும் நடப்பு உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் தத்தமது அடுத்த நகர்வை முன்னிறத்து இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளன.

இப் போட்டியில் 2 கோல்களால் வெற்றிபெறும் அணி இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான சொற்ப வாய்ப்பை பெறும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றியைக் குறிவைத்து களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

பனாமா கன்னிப் பிரவேசம்

தனது கன்னிப் பிரவேசத்தில் ஆர்ஜன்டீனாவை ஐஸ்லாந்து அதிரவைத்தது போன்று பெல்ஜியத்துக்கு சோதனை கொடுக்கும் எண்ணத்துடன் பனாமா தனது கன்னிப் பிரவேசத்தில் உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

குழு “ஜி” யில் இடம்பெறும் பெல்ஜியத்துக்கும் பனாமாவுக்கும் இடையிலான போட்டி சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது.

கால் இறுதிவரை முன்னேறக்கூடிய அணிகளில் ஒன்றாக அனுமாணிக்கப்பட்டுள்ள தரப்படுத்தலில் 3 ஆம் இடத்திலுள்ள பெல்ஜியம், இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கும். 

மறுபுறத்தில் முதல் முயற்சியில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் தரப்படுத்தலில் 55 ஆம் இடத்திலுள்ள பனாமா களம் இறங்கவுள்ளது.

இங்கிலாந்து எதிர் டியூனிசியா

கால்பந்தாட்ட அரங்கில் வெகுவாக முன்னேறிவரும் டியூனிசியாவிடம் இன்றைய குழு “எவ்” போட்டியில் இங்கிலாந்து பலத்த சவாலை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

தரப்படுத்தலில் இங்கிலாந்து 12 ஆம் நிலையிலும் டியூனிசியா 21 ஆம் நிலையில் இருக்கின்றன. 

வொல்கோக்ரட் விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் முன்னாள் சம்பியனான இங்கிலாந்து அதிகப்பட்ச புள்ளிகளான 3 புள்ளிகளைப் பெற கடுமையாக முயற்சிக்க வேண்டிவரும்.

அண்மைக்காலமாக வெகுவாக முன்னேறிவந்துள்ள டியூனிசியா, உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பதாக போர்த்துக்கலுடனான சிநேகபூர்வ போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டதுடன் ஸ்பெய்னுடனான போட்டியின் கடைசி செக்கன்களிலேயே தோல்வி அடைந்தது. 

எனவே இன்றைய போட்டியில் இங்கிலாந்தை டியூனிசியா அதிர்ச்சி அடையச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

(என்.வி.ஏ.)