34 ஓட்டங்களுடன் நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 89 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் தொடர் கடந்த 14 ஆம் திகதி செய்ன்ட் லூசியாவில் ஆரம்பமானது.

இப் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 79 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந் நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவு அணி 300 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இந்த இன்னிங்ஸில் டேவோன் ஸ்மித் 61 ஓட்டங்களையும் சேன் டோவ்ரிச் 55 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொண்டனர். இலங்கை  அணி சார்பாக லஹிரு குமார 4 விக்கெட்டுக்களையும் கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மல் 2 விக்‍கெட்டுக்களையும் அகில தனஞ்சய ஒரு விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்றுமுன்தினம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஒன்பது ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நான்காம் நாளான நேற்றைய தினம் 34 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியின் மஹிலா உடவாட்டே 19 ரன்னிலும், ரஜிதா டக்-அவுட் முறையிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த தனஞ்சய டிசில்வா 3 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமல் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். 

சந்திமல் 39 ரன்னில் கேமர் ரோசின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் மெண்டிஸ் உடன் ரோஷன் சில்வா ஜோடி சேர்ந்து ஓட்டங்களை அதிகரித்தார். இந் நிலையில் குசல் மெண்டிஸ் அரசைதத்தை பெற்றுக் கொண்டதுடன் 87 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்

ரோஷன் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த நிரோஷன் டிக்வெல்லா 62 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 89 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்மூலம் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 287 ரன்கள் முன்னிலை பெற்றது. அகிலா தனஞ்ஜெயா 16 ஓட்டங்களுடனும், சுரங்கா லக்மல் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். 

மேற்கிந்திய அணி சார்பாக சனோன் கேப்ரியல் 6 விக்கெட்டுக்களையும் கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.