ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததில்,  14 பேர்  பலியாகினர். 

ஆப்கானிஸ்தானில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கான் அரசு 5 நாள் போர் நிறுத்தமும் தாலிபான் அமைப்பினர் 3 நாள் போர் நிறுத்தமும் அறிவித்திருந்தனர். 

இதற்கிடையே, நன்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ரோடாட் மாவட்டத்தில் தலிபான்கள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 36 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுபேற்றது.

இந்நிலையில், அதே  நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகம் அருகே இன்று மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.