(எம்.மனோசித்ரா)

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரியை அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கும் மக்களுக்கும் வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது. அதில் முதலாவது அரச சேவை உத்தியோகத்தர்களின் சம்பளத்தினை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதாகும். 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் அதனை நிறைவேற்றியுள்ளோம். 

இது மாத்திரமல்லாது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஒரு வீதமாகக் காணப்பட்ட உள்நாட்டு உற்பத்தியை 3 வீதமாக அதிகரித்துள்ளோம். அதனை 2020 ஆம் ஆண்டில் 6 வீதமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 3.5 வீத நிதியை 2020 இல் 5 வீதமாக அதிகரிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படியே தனியார் வைத்தியசாலைகளுக்கான வட் வரியினை அடுத்த வாரம் முதல் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.