(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் குறித்து கூட்டு எதிரணிகளுக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்து செயற்படவே கட்சியின் உறுப்பினர்கள் தயாராக  உள்ளனர் என பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணியில் பாரிய கருத்து வேறுப்பாடுகள் மற்றும் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாக அரசாங்க தரப்பில் பொய்யான  பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றது. 

இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி ரீதியில் எவ்வித பேச்சுவாரத்தைகளும் இடம்பெறவில்லை. ஆனால் கட்சியின் உறுப்பினர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டு  வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் கூட்டு எதிரணி  ஒருபோதும் தனித்து  தீர்மானங்களை மேற்கொள்ளாது நாட்டு நலன் மற்றும் எதிர்கால  அரசியல்  மையப்பாடு போன்ற நிலைகளில் இருந்தே தீர்மானங்களை மேற்கொள்ளும். 

எனவே தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கு அவசியமும் இல்லை என்றார்.