(என்.வீ.ஏ.)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ரஷ்யாவின் கஸான் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெற்ற குழு சிவுக்கான  உலகக் கிண்ண கால்பந்தாட்ட ஆரம்பப் போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்ட முன்னாள் உலக சம்பியன் பிரான்ஸ், கடைசி நேரத்தில் பெறப்பட்ட கோலின் உதவியுடன் 2 க்கு 1 என்ற கொல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

நான்கு நிமிட இடைவெளியில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு பெனல்டி வழங்கப்பட்டதன் மூலம் இந்தப் போட்டி எந்தளவு கடுமையாகவும் இறுக்கமாகவும் மொதிக்கொள்ளப்பட்டது என்பதை உணர்த்தியது.கால்பந்தாட்டத்தில் பிரகாசிப்பதில்லை என அண்மைக்காலமாக கடும் விமர்சனத்துக்குள்ளான போல் பொக்பா போட்டியின் கடைசிப் பகுதியில் போட்ட கோல் பிரான்சின் வெற்றியை உறுதி செய்தது.

போட்டியின் 57ஆவது நிமிடத்தில் க்றிஸ்மானை, அவுஸ்திரேலிய பின்கள வீரர் ஒருவர் விதிக்கு முரணாக வீழ்த்தியதால் விடியோ மத்தியஸ்தரின் உதவியைப் பெற்ற உருகுவே மத்தியஸ்தர் குன்ஹா அண்ட்றெஸ் பெனல்டியை வழங்கினார்.

கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக வீடியொ உதவி மத்தியஸ்தரின் பரிந்துரைக்கு அமைய பிரான்ஸுக்கு வழங்கப்பட்ட பெனல்டியை அன்டொய்ன் க்றீஸ்மான் 58ஆவது நிமிடத்தில் கோலாக்கினார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை சிநேகபூர்வ போட்டியில் 6 க்கு 0 என துவம்சம் செய்த பிரான்ஸ் இலகுவாக வெற்றிபெறம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.நான்கு நிமிடங்கள் கழித்து தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து செமுவல் உம்டிட்டி, பந்தை கையால் தட்டியதால் அவுஸ்திரேலியாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

இந்தப் பெனல்டியின் மூலம்  கோல் நிலையை மய்ல் ஜெடிநாக் சமப்படுத்த ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.அதன் பின்னர் இரண்டு அணியினரும் வெற்றி கோலைப் போடுவதற்காக கடுமையாக முயற்சித்தனர்.

ஆனால் அந்தந்த அணிகளின் பின்கள வீரர்களும் கோல்காப்பாளர்களும் கோல் போடப்படுவதைத் தடுத்த வண்ணம் இருந்தனர்.மாற்று வீரராக களம் புகுந்த ஒலிவியர் கிரூட் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் பரிமாறிய பந்தை தனது நுனிக்காலால் தட்டிய போல் பொக்பா, பிரான்ஸின் வெற்றியை உறுதிசெய்தார்.