ஐரோப்பிய கால்பந்தாட்ட அரங்கில் இரண்டு அதி பலசாலிகளான போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் அணிகளுக்கு இடையில் சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற மிகவும் பரபரப்பான குழு "பி" கால்பந்தாட்டப் போட்டி 3 க்கு 3 என்ற கோல்கள் அடிப்படையில் வேற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

வெள்ளி இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவுக்குப் பின்னர் 1.25 மணிக்கு நிறைவு பெற்ற இப் போட்டியை போர்த்துக்கல் அணித் தலைவர் க்றிஸ்டியானோ ரொனால்டோவின் ப்றீ கிக் கோல் வெற்றிதோல்வியின்றி முடிவுக்குக் கொண்டுவந்தது.

மேலும் உலகக்கிண்ண வரலாற்றில் நான்கு உலகக் கிண்ண அத்தியாயங்களில் கோல் போட்ட உவே சீலர் (ஜேர்மனி), பெலெ (பிரேஸில்), மிரஸ்லாவ் க்ளோஸ் (ஜேர்மனி) ஆகியோருடன் க்றிஸ்டியானோ ரொனால்டோவும் இணைந்துகொண்டார்.

இப் போட்டியில் இரண்டு சந்தர்ப்பங்களில் போர்த்துக்கல் அணியை ரொனால்டோ முன்னிலையில் இட, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் டியகோ கொஸ்டா கோல் நிலையை சமப்படுத்தினார்.

வெள்ளியன்று முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் கடைசிக் கட்டங்களில் கோல்கள் போடப்பட்டன. ஆனால், இப் போட்டியின் ஆரம்பத்திலேயே பெனல்டி கோல் ஒன்று போடப்பட ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட ஆரம்பித்தது.

மூன்றாவது நிமிடத்தில் க்றிஸ்டியானோ ரோனால்டோ பந்தை நகர்த்திச் சென்றபோது ஸ்பெய்ன் பெனல்டி எல்லையில் நெச்சோவினால் வீழ்த்தப்பட போர்த்துகலுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அடுத்த நிமிடம் பெனல்டியை தானாகவே எடுத்த ரொனால்டோ, மின்னல் வேகத்தில் கோலினுள் புகுத்தி போர்த்துக்கலை 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இட்டார்.

20 நிமிடங்கள் கழித்து போர்த்துக்கல் வீரர்கள் இருவரைக் கடந்து பந்தை நகர்த்திச் சென்ற டியகோ கொஸ்தா, பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு அலாதியான கோல் போட்டு ஸ்பெய்னுக்கு கோல் நிலையை 1 க்கு 1 என சமப்படுத்திக்கொடுத்தார். 

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஸ்பெய்ன் வீரர் இஸ்கோ ஓங்கி உதைத்த பந்து கோல்காப்பின் குறுக்குக் கம்பத்தில் பட்டு சரியாக கோல் கோட்டில் வீழ்ந்து வெளியேறியது. ஸ்பெய்ன் வீரர்கள் அதனை கோலா என மீள் பரிசீலனை செய்யுமாறு மத்தியஸ்தரிடம் கோரியபோதிலும் அது கோல் இல்லை என்பது சலன அசைவில் பின்னர் தெரியவந்தது.

தொடர்ந்து கோல் எண்ணிக்ககையை உயர்த்த ஸ்பெய்ன் கடுமையாக முயற்சித்தது.

ஆனால் இடைவேளைக்கு ஒரு நிமிடம் இருந்தபோது பெனல்டி எல்லைக்கு வெளியிலிருந்து ரொனால்டோ பந்தை நகர்த்தியவாறு தனது இடதுகாலால் அசுர வேகத்தில் தாழ்வாக உதைக்க அதனை தடுக்க ஸ்பெய்ன் கோல்காப்பாளர் முயற்சித்தபோதிலும் பந்து அவரது கைகளில் பட்டு கோலினுள் உருண்டு சென்றது.

இடைவேளையின்போது போர்த்துக்கல் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது ஸ்பெய்ன் வீரர்கள் சிறந்த வியூகங்களுடன் விளையாடி போர்த்துக்கலுக்கு நெருக்கடியைக் கொடுத்த வண்ணம் இருந்தனர்.

இதன் பலனாக போட்டியின் 55ஆவது நிமிடத்தில் 25 ப்றீ கிக் மூலம் ஸ்பெய்ன் அணித் தலைவர் ரமோஸ் பந்தை இடது புறமாக உயர்த்திப் பரிமாறிய பந்தை தனது தலையால் சேர்ஜியா கோல்பகுதியை தட்டிவிட டியகோ கொஸ்தா தனது இரண்டாவது கோலைப் போட்டு கோல் நிலையை மீண்டும் சமப்படுத்தினார்.

போட்டியின் ஆரம்பத்தில் போர்த்துக்கலுக்கு பெனல்டி ஒன்றைத் தாரைவார்த்த நெச்சோ, 58ஆவது நிமிடத்தில் வொலி உதை மூலம் ஸ்பெய்னின் மூன்றாவது கோலைப் போட்டார். அவர் இடது காலால் உதைத்த பந்து வளைந்து சென்று வலது கம்பத்தில் பட்டு மீண்டும் இடது கம்பத்தில் உராய்ந்து கோலினுள் செல்ல ஸ்பெய்ன் 3 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.

அதன் பின்னர் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு மாறி மாறி எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. தொடர்ந்து இரண்டு அணிகளிலும் மாற்று வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

போட்டியின் 88 ஆவது நிமிடத்தில் ஸ்பெய்னின் பெனல்டி எல்லைக்கு வெளியில் இருந்து கிடைத்த ப்றீ கிக்கை அலாதியாக கோலாக்கிய ரொனால்டோ போட்டியில் கோல் நிலையை 3 க்கு 3 என சமப்படு்த்தினார்.

உபாதை ஈடு நேரத்தில் போர்த்துகல்லுக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அதனை பின்கள வீரர்கள் முறியடித்தனர். இப் போட்டியில் ஹெட்ரிக் கோல்களைப் போட்ட ரோனால்டோ, தனது கோல் எண்ணிக்கையை 84 ஆக உயர்த்தி புஸ்காஸின் மொத்த கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

அத்தடன் தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் 54 ஆவது ஹெட்ரிக்கையும் தேசிய அணிக்காக 6 ஆவது ஹெட்ரிக்கையும் பதிவு செய்தார். 

போட்டி முடிவில் இரண்டு அணிகளினதும் வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்தகொண்டமை விசேட அம்சமாகும். ஆட்டநாயகன்: க்றிஸ்டியானோ ரொனால்டோ. 

(என்.வீ..ஏ.)