சிறையிலுள்ள எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ்காந்தி கொலைகுற்றவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின்  தாயார் அற்புதம்மாள்  தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் சாந்தன் பேரறிவாளன் நளினி ராபர்ட் பயஸ் ரவிச்சந்திரன் ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறனர்.

இந்த வழக்கில் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும்  4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே  7 பேரை விடுவிக்கக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  நிராகரித்தார்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்  தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ஊடகவியளாலர்களிடம் குறிப்பிடுகையில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகனை வெளியில் கொண்டு வர பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டேன். ஆனாலும் எந்த பலனும் இல்லை.

அவனை சிறையில் இருந்து விடுவிக்க முடியாவிட்டால் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று வலியுறுத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

''என் புள்ளை அவன் இளமை முழுவதையும் இழந்துட்டான். இதுக்கு மேலே இழக்கிறதுக்கு என்ன இருக்கு? அவனால் பிரச்னை வரும். வில்லங்கமாகும்னு. வெளியில் விடமுடியாதுன்னு பயந்தீங்கன்னா இந்த அரசாங்கத்துக்கிட்ட நான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன் என் புள்ளையைக் கொன்னுடுங்க.

மரண தண்டனை கொடுத்துடுங்க. கொஞ்சம் கொஞ்சமா சாவறதுக்கு மொத்தமா போய்ச் சேர்ந்துடட்டும். நான் கொஞ்ச நாளைக்குப் புலம்பிட்டிருப்பேன். பைத்தியக்காரி மாதிரி தெருத் தெருவா சுத்திட்டிருப்பேன்.

அதனால் யாருக்கு என்ன இழப்பு? உங்க அரசாங்கமும் உங்க நாடும் நிம்மதியா இருந்துட்டுப் போகட்டும். இத்தனை வருஷத்துல ஒருநாளும் நான் நம்பிக்கைய இழந்ததில்லே. இப்போ தோணுது. இனியும் என் புள்ளை என்கிட்ட வருவான்; சந்தோஷமா வாழுவான் என்கிற நம்பிக்கைப் போயிருச்சு. போங்கய்யா நீங்களும் உங்க அரசாங்கமும். என்னையும் என் புள்ளை வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமா செதைச்சுட்டீங்களேய்யா” 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.