எக்கெத்தரின்பேர்கள் விளையாட்டரங்கில் சற்றுமுன்னர் நிறைவுபெற்ற குழு ஏயிற்கான பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் எகிப்து கோல்காப்பாளர் மொஹமத் எல்ஷெனாபி பல கோல்போடும் வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்திய போதிலும் 89ஆவது நிமிடத்தில் ஜொசே மரியா ஜிமெனெஸ் உயர தாவி தலையால் முட்டி போட்ட கோல் உருகுவேயின் வெற்றியை உறுதி செய்தது.

உருகுவேயின் அதி சிறந்த முன்கள வீரரான லூயிஸ் சுவாரெஸின் குறைந்தது 4 கோல் போடும் இலகுவான வாய்ப்புகளையும் தடுத்த எகிப்து கோல்காப்பாளர் எல்ஷெனாபியினால் ஜிமெனெஸின் கோலைத் தடுக்க முடியாமல் போனது.

போட்டியின் 89 ஆவது நிமிடத்தில் மைதானத்தில் இடதுகோடியிலிருந்து மாற்று வீரர் கார்லோஸ் அண்ட்ரெஸ் சன்ச்செஸின் ப்றீ கிக் பந்தை நோக்கி குறைந்தது 3 அடி உயரம் தாவிய ஜொசே மரியா ஜிமெனெஸ் பந்தை தனது தலையால் முட்டி, எதிரணி கொல்காப்பின் இடது கம்பத்தை அண்மித்தவாறு கோலினுள் புகுத்தி உருகுவேக்கு கடைசிக் கட்டத்தில் வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

அதற்கு சில நிமடங்களுக்கு முன்னர் உருகுவே வீரர் எடிசன் கவானியின் ப்றீ கிக் இடது கோல்காப்பில் பட்டு முன்னோக்கி வர, அதனை எகிப்தின் பின்கள வீரர் ஒருவர் மத்திய களத்தை நோக்கி உதைத்து மற்றொரு கோல் போடும் வாய்ப்பொன்றைத் தடுத்தார்.

போட்டி முழுவதும் உருகுவே அணியினர் ஆதிக்கம் செலுத்தியபோதிலும் கோல்காப்புகளிடையே எல்ஷெனாபி அபாரமாக செயற்பட்டதால் கோல் போடும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன.

மறுபுறத்தில் மோசமான பந்து பரிமாற்றங்களும் கோலை நோக்கிய பவவீனமான முயற்சிகளும் எகிப்துக்கு கிடைத்த பல கோல் போடும் வாய்ப்புகளை கோட்டைவிட வைத்தது. 

போட்டி முழு நேரத்தைத் தொட்டு உபாதையிட நேரம் ஆரம்பித்த பின்னர் எகிப்தின் முன்கள வீரர்கள் உருகுவேயின் கோல் எல்லையை பல தடவைகள் ஆக்கிரமித்த போதிலும் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்த தவறினர். 

இப் போட்டியில் பிரமிக்கவைக்கும் வகையில் கோல்களைத் தடுத்த எகிப்து கோல்காப்பளார் மொஹமத் எல்ஷெனாபி சந்தேகத்துக்கு இடமின்றி ஆட்டநாயகனானார்.

இதேவேளை உருகுவே கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா, ஐந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு கோலைத்தானும் விட்டுக்கொடுக்காமல் சர்வதேச காலபந்தாட்ட தேசிய சாதனை ஒன்றை சமப்படுத்தினார். இதற்கு முன்னர் லெடிஸ்லோ மயுர்கீவிக்ஸ் ஐந்து சர்வதேச போட்டிகளில் கோல் எதனையும் விட்டிருக்கவில்லை.

உபாதையிலிருந்து மீளாத எகிப்தின் நட்சத்திர வீரர் மொஹமத் சாலாஹ் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

(என்.வீ.ஏ.)