சவூதி அரேபியாவை 5 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட ஆரம்பப் போட்டியில் (குழு ஏ) ரஷ்யா துவம்சம் செய்த நிலையில் இக் குழுவில் இடம்பெறும் மற்றைய இரண்டு நாடுகளான எகிப்து - உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி எக்கெத்தரின்பேர்க் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

1978 க்குப் பின்னராக உலகக் கிண்ண ஆரம்பப் போட்டிகளில்  உருகுவே வெற்றிபெற்றதில்லை. இம்முறை அதனை மாற்றுவதற்கு கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பாரக்கப்படுகின்றது.

உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 28 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் காலடி எடுத்துவைத்துள்ள எகிப்து, இதற்கு முன்னர் 1934 இலும் 1990 இலும் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தது.

ரியல் மெட்றிட் கழகத்துக்கு எதிரான லிவர்பூலின் ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டியில் (மே 26) தோற்பட்டையில் காயத்துக்குள்ளான மொஹமத் சலாஹ் இன்றைய போட்டியில் பெரும்பாலும் விளையாடுவார் என்ற செய்தி எகிப்துக்கு பலம் சேர்ப்பதாகவும் மிகுந்து திருப்தியைக் கொடுப்பதாகவும் அமைகின்றது. 

ஒருவேளை அவரால் விளையாட முடியாமல்போனால், தடுத்தாடுவதில் முக்கியஸ்தர்களான மொஹமத் ட்ரிஸேகெத், ரமடான் சோபி ஆகிய இருவரும் எகிப்து அணியில் பிரதான பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அங்குரார்ப்பண உலகக் கிண்ணப் போட்டியிலும் 1950 உலகக் கிண்ணப் போட்டியிலும் உலக சம்பியன்களான உருகுவே இன்றைய போட்டியில் எகிப்துக்கு கடும் சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

உருகுவேயைப் பொறுத்தமட்டில் கடந்த இரண்டு உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளதை அவதானிக்கலாம். மேலும் எட்டு வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் உருகுவே நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது.

உருகுவே அணிக்கு விசேட பலம் சேர்ப்பவர்களான லூயிஸ் சுவாரெஸ், எடின்சன் கெவானி ஆகிய இருவரும் விளங்குகின்றனர். அது மட்டுமல்லாம் பிரேஸிலில் 2014 இல் இரண்டாம் சுற்றுடன் வெளியேறிய உருகுவே அணியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் இம்முறையும் அணியில் இடம்பெறுவது அதற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் அதன் கடந்தகால ஆரம்பப்போட்டி முடிவுகள் திருப்தி தருவதாக இல்லை. 1970 முதல் 2014 வரை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் உருகுவே அதன் ஆரம்பப் போட்டியில் வெற்றிபெற்றதில்லை. தனது ஆறு ஆரம்பப் போட்டிகளில் மூன்றை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட உருகுவே, 3 தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளது. 

இம்முறை அந்த துரதிர்ஷ்டத்தை எக்கெத்தரின்பேர்க் மைதானத்தில் உருகுவே துடைத்தெறியுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பீபா தரப்படுத்தலில் உருகுவே 14 ஆம் இடத்திலும் எகிப்து 37ஆம் இடத்திலும் இருக்கின்றன.

எகிப்தும் உருகுவேயும் ஒரே ஒரு தடவை சிநேபூர்வ சர்வதேச போட்டியில் மோத்திக்கொண்டபோது (2006 ஆகஸ்ட் 16) எகிப்து 2 க்கு 0 என வெற்றிபெற்றிருந்தது.

மிகவும் வயது கூடிய வீரர்

இம்முறை எகிப்து அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் கோல்காப்பாளர் ஈசாம் எல் ஹதாரி ஆவார். அவரது வயது 45 வருடங்கள் 5 மாதங்களாகும். இன்றைய போட்டியில் அவர் விளையாடும் பட்சத்தில் உலகக் கிண்ண வரலாற்றில் அதிகூடிய வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையை நிலைநாட்டுவார்.

அணிகள் விபரம்  

எகிப்து: ஈசாம் எல் ஹதாரி (அணித் தலைவர்) மொஹமத் எல்ஷெனாவி, அலி கப்ர், அஹ்மத் ஹெகாஸி, அஹ்மத் பாத்தி, மொஹமத் ஆப்டெல ஷபி, தாரெக் ஹமெத், மொஹமத் எல் நெனி, மொஹமத் ட்ரெஸிகுவே, அப்துல்லா சய்த், ரமதான் சோபி, மர்வான் மொஹ்சென். உடற்தகுதியைப் பொறுத்து மொஹமத் சலாஹ்)

உருகுவே: பெர்னாண்டோ முஸ்லேரா, கிலேமோ வரேலா, யோசெ மரியா ஜிமெனெஸ், டியகோ கொடின், மார்ட்டின் கெசரெஸ், நஹிட்டான் நண்டெஸ், மார்ட்டியாஸ் வெசினோ, ரொட்றிகோ பென்டன்கர், ஜியோர்ஜியன் டி அரசேட்டா, எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரெஸ்.

(என்.வீ.ஏ.)