(இராஜதுரை ஹஷான்)

ரமழான் பண்டிகையின் பரிசாக இன்று இனத்துக்காக போராடிய பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு அரசாங்கம் சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல் கண்ட சுதத தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பினர்  ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத்எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தினார் என ஆதாரமற்ற முறையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு இன்று கடூழிய சிறைத்தண்டனை விதித்து, பெளத்த பிக்குகளின் மத உரிமைகளை பறித்துள்ளனர்.

சட்டம்  அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்பட வேண்டும். ஆனால் தற்போது சட்டம் மாறுப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. பிணைமுறி குற்றவாளிகள் யார் என்று நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.  ஆனால் சட்டம் அவர்களுக்கு எதிராக இதுவரை காலமும் எவ்வித  நிரந்தர தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை. 

நீதிமன்றத்திற்கு கல்லெறிந்து நாட்டின் நீதித்துறையினை அவமதித்த அமைச்சர் ரிஷாத் பதியூதின் உள்ளிட்ட அவரது சகாக்கள் இன்று அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் உள்ளனர்.

நீதிமன்றத்தினை அவமதித்தவர்களுக்கு தண்டனை வழங்காமல் மன்னிப்பு வழங்கிய அரசாங்கம் மத உரிமை தொடர்பில் பேசிய ஞானசார தேரருக்கு கடுமையான தண்டனை வழங்கியுள்ளமை நியாயமற்றதாகவே காணப்படுகின்றது. 

ஆகவே அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் காலங்களில் தக்க பதிலடியினை அனுபவிக்க நேரிடும் என்றார்.