வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னை சந்தித்து விட்டு நாடு திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி " இனி பிரச்சினை இல்லை, நிம்மதியாக உறங்குங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்க ஜனாதிபதி டொலாட் டரம்புக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னுக்குமிடையிலான சந்திப்பு கடந்த 12 ஆம் திகதி சிங்கப்பூரின்  சென்டோசா தீவிலுள்ள  ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது, அணு ஆயுதங்களை ஒழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இருவருக்கிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, வடகொரியாவுக்கு வருமாறு கிம், ட்ரம்புக்கும்  அமெரிக்கா வருமாறு ட்ரம்ப், கிம்முக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந் நிலையில் வெற்றிகரமான வரலாற்று சந்திப்பின் பின் நாடு திரும்பிய ட்ரம்ப் தனது உத்தி‍யோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்  " நீண்ட பயணத்துக்கு பிறகு தரையிறங்கி இருக்கிறேன்.  நான் பதவியேற்ற நாளைவிட தற்போது அனைவரும் பாதுகாப்பாக உணர்வார்கள். இனி வடகொரியாவிடமிருந்து அணுஆயுதங்கள் குறித்த எந்த அச்சுறுத்தலும் இருக்காது. வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்தது நல்ல அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இனி எந்த பிரச்சினையும் இல்லை. நிம்மதியாக உறங்குங்கள்" என்றும் பதிவிட்டுள்ளார்.