மேற்கிந்தியத்  தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கை நேரப்படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது.

செய்ன்ட் லூசியாவில் இடம்பெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக இலங்கை அணியின் வீரர்களான குசல்பெரேரா, மஹேல உடவத்த ஆகி‍யோர் களம்  புகுந்தனர். உடவத்த களம்  புகுந்த வேகத்திலேய இரண்டு பந்துகளை எதிர்கொண்டு டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் களமிறங்கிய தனஞ்சய டிசில்வா 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார். அவரையடுத்து பெரேராவுடன் குசல் மெண்டிஸ் கைகோர்த்து இருவரும் ஓட்ட எண்ணிக்கையை குவிக்க ஆரம்பித்தனர். 

குசால் பெரேரா 55 பந்தில் 32 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் களமிறங்கினார். இதனையடுத்து குசால் மெண்டிஸ் 45 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்கள் நிலை தடுமாறி மைதானத்திலிருந்து ஆட்டமிழந்து வெளியேறினர். அணியின் ஓட்ட எண்ணிக்கையானது சந்திமல் பெற்றுக்கொண்ட சதத்தினால் அதிகரித்தது.

இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79 ஓவர்களில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணியின் தலைவர் ஆட்டமிழக்காமல் சந்திமால் 186 பந்துகளில் 119 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

மேற்கிந்திய அணி சார்பாக சனோன் கேப்ரியல் 5 விக்கெட்டுக்களையும் கேமர் ரோச் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

இதனையத்து முதல் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆட்ட நேர முடிவின் போது இரு ஓவர்களுக்கு இரண்டு ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.