(நெவில் அன்தனி)

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் ரஷ்யாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் இன்று நடைபெறும் ஆரம்பப் போட்டி தொடர்பான செய்தியைத் தொகுத்து வழங்கும் அரிய வாய்ப்பு இலங்கையின் இளம் கால்பந்தாட்ட வீரர் மொஹமத் அயான் சதாத்துக்கு கிடைத்துள்ளது.

பீபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக நடத்தப்பட்ட கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் பலனாகவே இந்த அரிய வாய்ப்பு அயான் சதாத்துக்கு கிடைத்தது. இதன் மூலம் தனது தாய்நாடான இலங்கைக்கும் தனது பாடசாலையான றோயல் கல்லூரிக்கும் பயிற்சிபெறும் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்துக்கும் புகழையும் பெருமையையும் அயான் சதாத் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 211 நாடுகளைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் போட்டி தொடர்பான ஆய்வுக் கட்டுரையையும் போட்டி தொடர்பான செய்தி தொகுப்பையும் எழுதுவதற்கு அயான் சதாத் தெரிவானமை பெருமைக்குரிய விடயமாகும்.

மொஸ்கோ, ஸ்பார்ட்டக் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியின் ஓர் அம்சமான நட்புறவு, சமத்துவம், நேர்மை, சுகாதாரம், சமாதானம், அர்ப்பணிப்பு, வெற்றி, பாரம்பரியம், மதித்தல் ஆகிய ஒன்பது பெறுமதிமிக்க பண்புகளை உள்ளடக்கிய பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்திலும் அயான் சதாத் உரையாற்றினார். 

இவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்ததையிட்டு பெருமை அடைவதாக அயான் சதாத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அயான் சதாத் உட்பட பலருக்கு விருதுகளும் டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதேவெளை, கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் இலங்கை சார்பாக மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தைச் சேர்ந்த மொஹமத் அயான் சதாத்தின் சக வீரரான தினுக்க பண்டார (நுகேகொடை, புனித சூசையப்பர் கல்லுரி) கோல்காப்பாளராகத் தெரிவாகி லயன் அணிக்காக விளையாடினார்.

இவர் மூன்று போட்டிகளில் கோல்காப்பாளராக விளையாடி ஒரு கோலை மாத்திரமே விட்டுக்கொடுத்தார்.

இவர்கள் இருவரும் மற்றைய நாடுகளின் சிறுவர்களுடன் மொஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஆரம்பி விழா வைபவத்தில் கலந்துகொண்டதுடன் ஆரம்பப் போட்டியையும் கண்டு களித்தனர்