(இரோஷா வேலு) 

கிரேண்ட்பாஸில் கட்டடம் சரிந்து விழுந்து நிறுவன உரிமையாளர் உட்பட ஏழுபேர் மரணித்த மற்றும் இருவர் காயங்களுக்குள்ளாகிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மந்த கதியில் நடப்பதாக குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர் இணைந்து இன்று நிறுவனத்திற்கு முன்பாக போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். 

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட நிறுவன உரிமையாளர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

எனது தந்தையுட்பட ஏழுபேரின் உயிரை காவுகொண்ட கட்டட இடிபாட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் விசாரணைகள் இதுவரையில் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது. 

ஆனால் இதற்கு பின்னர் நாட்டில் இடம்பெற்ற உதாரணமாக ஹொரண இறப்பர் தொழில்சாலையில் பணியில் ஈடுபட்ட ஒருவர் இரசாயன குழியில் விழுந்து மரணித்த சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார். 

இப்படியான பல சம்பவங்களில் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பிலும் நடைபெறும் விசாரணைகள் தொடர்பிலும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது.

ஆனால், இச்சம்பவம் இடம்பெற்று  நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில், குற்றவாளிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மிகவும் மெதுவாகவே நகர்கின்றது. நடக்கும் விசாரணைகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறியகிடைப்பதில்லை. இதனை எதிர்த்தே இன்று நாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்டஈடுகளை ஊழியர்கள் சம்மேளனத்துடன் இணைந்து எமது நிறுவனமும் வழங்கியுள்ளது. ஆனால் இவர்களின் மரணத்தை ஏற்படுத்திய சூத்திரதாரிகள் இதுவரையில் கைதுசெய்யப்படவுமில்லை. விசாரணைகள் குறித்து எதுவித தகவலும் தெரியவில்லை  என்றார். 

அதேபோல் இச்சம்பவத்தினால் மரணித்தவர்களின் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், 

எமது உறவுகளை காவுகொண்ட சம்பவத்தின் உண்மை குறித்து எமக்கு தெரியவில்லை. இந்நிறுவனம் எமக்கு ஒரு தொகை நஷ்ட ஈட்டை பெற்றுத் தந்துள்ளது. ஆனால் எமது உறவுகளை எவராலும் திரும்ப தரமுடியாது. எனவே எமது உறவுகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் கைதுசெய்யப்படல் வேண்டும். எமக்கு வேண்டிய நீதியை பெற்றுத்தாருங்கள். 

பொலிஸாருக்கும் எமக்கும் பகையில்லை. நாங்கள் எமது உறவினர்களை இழந்து நிற்கின்றோம். எமக்கு வேண்டியது நீதியே. அதனை பெற்றுத்தாருங்கள். விசாரணையை துரிதப்படுத்துங்கள். 

குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும். அப்போதே எமது உறவுகளின் ஆத்மா சாத்தியடையும். அதேபோல், எதிர்வரும் காலங்களிலும் எஞ்சியுள்ள பகுதிகளும் இடிந்தும் அபாயத்திலேயே உள்ளது. அவற்றையும் உடனடியாக உரியவர்கள் பொறுப்பேற்று இன்னுமொரு உயிர் போகாத வண்ணம் காக்கப்படல் வேண்டும் என்றனர்.

இம்மரணங்களுக்கான விசாரணைகளின் நிலையென்ன தொடர்பில் பொலிஸாரிடம் வினவிய போது பொலிஸார் தெரிவித்தாவது, 

இம்மரணங்களுக்கான வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன. ஒருபோதும் நாம் அவற்றை மழுங்கடிக்க போவதில்லை. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மூவர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குடும்பத்தகராறுக்குள்ளாகவும் காணப்படுகின்றது.

 சிலரின் ஆவேசப் பேச்சுக்கள் இவ்வாறு பொது மக்களை ஒன்று கூட்டுவது போன்றது தங்களது தனிப்பட்ட ரீதியிலான பிரச்சினைகளுக்காக இச்சம்பவத்தை வைத்து பலித்தீர்ப்பது போலவே காணப்படுகின்றது. 

நாம் அனைத்து தரப்பிருந்தும் விசாரணைகளை மேற்கொள்கின்றோம். கட்டடத்தின் உரிமையாளர் கட்டடத்தை மீள்நிர்மாணிக்கவென இன்னுமொரு நிறுவனத்திடம் வழங்கியுள்ளார். 

அவ்வாறு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனமே இக்கட்டடங்களின் உரிய பாதுகாப்புகளின்றி மீள்நிர்மாணத்தில் ஈடுபட்டுள்ளது. இதன்போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டது. 

எனவே பாதுகாப்பின் செயற்பட்ட குழுவினரே குற்றவாளியாக்கப்படுவார். அவர்களை நாம் கைதுசெய்துள்ளோம். இதுவே இவ்வழக்கின் விசாரணைகளின் தற்போதைய நிலை என்றனர். 

கிராண்பாஸில் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி பல்சரக்கு பொருட்களை பொதி செய்யும் களஞ்சியசாலையின் மீது அருகிருந்த கட்டட சுவரொன்று சரிந்து வீழ்ந்ததில், ஸ்தலத்திலேயே 7 பேர் மரணித்திருந்துடன் இருவர் படுகாயங்களுக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.