(நா.தனுஜா)

'குப்பைமேடு சரிந்து வீழ்ந்த போது இப்பகுதி மீது காணப்பட்ட அவதானம் இப்போது இல்லை. அரசாங்கம் பொதுமக்கள் என அனைவரும் அனர்த்தத்தின் சேதங்களை மறந்துவிட்டார்கள். ஆனால் நாங்கள் இன்னமும் அதிலிருந்து மீளவில்லை. மீள்வதற்கான அடித்தளத்தினை இடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அனர்த்தத்தின் எச்சங்களை சுமந்து வாழும் எமக்கு அதன் பின்னணியில் தற்போது உருவாகிவரும் ஏனைய சமூகப் பிரச்சினைகள் மேலும் அச்சமூட்டுகின்றன" என்கிறார் சீதா.

மீத்தொட்டமுல்ல குப்பைமேடு சரிவிற்கு பின்னர் தற்போதும் குப்பைமேட்டிற்கு மிக அருகாமையில் வசிக்கும் சீதாவின் தொனியில் உணரமுடிந்த இயலாமைக்கு பதிலுரைப்பது இயலாத காரியம் எனவே தோன்றுகிறது.

மீத்தொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்து அப்பாவி உயிர்களை காவூகொண்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இன்றளவிலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனர்த்த பாதிப்புக்களிலிருந்து முழுவதும் மீளாத நிலையிலேயே உள்ளனர். மீத்தொட்டமுல்ல குப்பைமேடு சரிந்தமையினால் ஏற்பட்ட நேரடித் தாக்கங்களை கடந்து அதன் பின்னணியில் தற்போது தோன்றியுள்ள ஏனைய பிரச்சினைகள் எதிர்வரும் காலத்தில் பாரிய சமூகப் பிரச்சினைகளாக எழுச்சியடையும் அபாயம் உருவாகியுள்ளது.

கொலன்னாவ மீத்தொட்டமுல்ல பகுதியில் குப்பைகளை இடுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட இடத்தின் அளவை விட மேலதிக நிலம் பயன்படுத்தப்பட்டமை குப்பைகளை அகற்றுவதற்றுவதற்கான விலைமனுக்கோரல் விநியோகத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட மோசடி, குப்பைகளை முறையாக அகற்றும் பணியை மேற்கொள்வதற்கு வேறு பல நிறுவனங்கள் முன்வந்த போதும் அரச அதிகாரிகளின் சுயலாபங்கள் கருதி அவை கைமாற்றப்படாமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் கவனிப்பாரற்ற நிலையிலேயே உள்ளது.

அனர்த்தம் நிகழ்ந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையிலேயே அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் மற்றும் எச்சரிக்கை வலயம் என அறிவிக்கப்பட்டமையால் அங்கிருந்து வெளியேறிய மக்களின் வீடுகளுக்கான தொகை மதிப்பீடு ஓரளவேனும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதனை முழுமையாக செலுத்தி முடிக்கும்  நடவடிக்கைகள் இன்னமும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறிப்பிட்டுக்கூற முடியாத விடயமாக உள்ள நிலையில் இப்பிரச்சினை காரணமாக தற்போது தீவிரமடையும் ஏனைய பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவது அவசியமாகின்றது.

மீத்தொட்டமுல்ல பகுதியில் குப்பை கொட்டப்பட்ட பின்னர் அங்கு ஏற்பட்ட கடும் துர்நாற்றம் மற்றும் கிருமித்தொற்று அபாயம் காரணமாக அனர்த்தம் நிகழ்வதற்கு சில காலங்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் இயங்கிய ராகுல வித்தியாலயம் எனும் அரச பாடசாலை மூடப்பட்டுள்ளது. மீத்தொட்டமுல்ல பிரதேசத்தின் சுற்றுவட்டத்தில் வாழ்ந்த அநேக மாணவர்கள் கல்வி பயின்று வந்த ஓர் அரச பாடசாலை முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதுடன் தற்போதுவரை அப்பாடசாலை மீள திறக்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது. அங்கு கல்வி பயின்ற மாணவர்கள் ராகுல வித்தியாலயத்தை விடவும் தொலைவிலுள்ள பாடசாலைகளில் தற்போது கல்வி பயின்றுவரும் நிலையில் மேற்படி பாடசாலையை மீளத் திறப்பதற்கு அரசு எவ்வித முன்நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேபோல் அனர்த்தத்தின் பின்னர் எச்சரிக்கை வலயம் என அறிவிக்கப்பட்ட தஹம்புர பகுதியிலிருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இன்னமும் அப்பகுதியில் சில குடும்பங்கள் தொடர்ந்து வசித்து வருகின்றன. அத்தோடு அப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் அநேக குடும்பங்களும் அக்குடும்பங்கள் அனைத்திலும் பல சிறுவர்களும் வசித்துவரும் அதேவேளை அப்பகுதியின் சுற்றுச்சூழல் வாழ்வதற்கு ஒவ்வாத நிலையில் உள்ளது. 

அனர்த்தத்தின் பின்னர் மீத்தொட்டமுல்ல பகுதியில் புதிதாக குப்பை கொட்டப்படாத போதிலும் ஏற்கனவே போடப்பட்டிருந்த குப்பைகள் இதுவரை காலமும் அகற்றப்படவில்லை. மேலும் அனர்த்தத்தினால் பாதிப்படைந்த வீடுகள் முற்றுமுழுதாக உடைக்கப்படாமையினால் தொடர்மழையின் காரணமாக நுளம்புப் பெருக்கத்திற்கு சாதகமான காரணிகள் அங்கு தோன்றியுள்ளன. நகரங்களின் தொடர்மாடி வீடுகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான காரணிகள் உள்ளனவா எனப் பரிசோதிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் இப்பிரதேசத்தில் டெங்கு நுளம்பு உருவாவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருந்தும் எதுவித தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அங்கலாய்க்கின்றனர் மக்கள். 

அனர்த்த பிரதேசத்தைவிட்டு பெரும்பாலான மக்கள் வெளியேறியுள்ள நிலையில் போதைப்பொருள் பயன்பாடு, விற்பனை என்பன அதிகரித்துள்ள இடமாகவும் போதைப்பொருளை பதுக்கும் மறைவிடமாகவும் இப்பிரதேசம் மாறியுள்ளது. நன்மை, தீமைகளை ஆராயும் பக்குவமற்ற ஏராளம் சிறுவர்கள் வாழும் ஒரு பகுதியில் திரைமறைவில் சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கம் காணப்படுகின்றமை பெரும் சமூகச்சீரழிவிற்கான ஆரம்ப அறிகுறியாகும். 

ஆக மீத்தொட்டமுல்ல குப்பைமேட்டின் சரிவு எனும் ஓர் அனர்த்தத்தின் பின்னணியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாகி அபாயச் சங்கினை உரத்து ஊதிய வண்ணமுள்ளன. எனினும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்துவதற்கான ஆதாரங்களோ அதனூடான முன்னேற்றங்களோ இல்லை.

குப்பைகளை வெளியேற்றுவதற்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட இடம் நிரந்தர இடமாக மாற்றமடைந்தமை குறித்தும் அங்கு நாளொன்றுக்கு கொட்டப்பட்ட பத்து டொன்னுக்கும் மேற்பட்ட குப்பையினால் மக்களின் வாழ்க்கைக்கு ஒவ்வாத காரணிகள் தோற்றம் பெற்றமை தொடர்பிலும் எம்மிடம் பகிர்ந்து கொண்ட மீத்தொட்டமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி போபகே அப்பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனை எதிர்த்து தம்மால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார். 

தூய்மையான சூழலில் வாழ்வதற்கான அவர்களது போராட்டம் அரசாங்கத்தினால் அடக்கப்பட்டதோடு அப்பிரதேச மக்கள் குப்பை கொட்டப்படுவதற்கு எதிராகப் போராடிய போதே அரசாங்கத்தினால் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதும் ஏற்கப்பட வேண்டிய உண்மையாகும்.

அனர்த்தம் நிகழ்ந்து காலங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் முழுமையான இழப்பீடும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு அரசினால் வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் அரச அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்து சலிப்படைந்துள்ள மீத்தொட்டமுல்ல தஹம்புர பிரதேசவாசி சுவர்ணதிலகா, நடந்துமுடிந்த பிரச்சினைக்கு இன்னமும் தீர்வினைப் பெற்றுத்தராத அரசாங்கம் இப்போது உருவாகிவரும் டெங்கு நுளம்பு போதைப்பொருள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள ராகுல வித்தியாலயம் ஆகிய பிரச்சினைகளுக்கேனும் விரைந்து தீர்வுகாண வேண்டும் என்றார். 

இவ்விடயம் தொடர்பில் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர் எம்.டி.எம்.இக்பாலிடம் வினவினோம். மீத்தொட்டமுல்ல குப்பைமேடு சரிவு அனர்த்தம் ஏற்பட்டமையின் பின்னர் கொழும்பு மாநகரசபை இவ்விடயத்திலிருந்து முற்றாக விலகி விட்டதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையே தற்போது இவ்விடயம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக கொட்டப்பட்டு வந்த குப்பைமலையினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட பின்னரும் கூட அப்பிரதேசத்தினதும் பிரதேச மக்களினதும் புனர்வாழ்வினை நோக்கிய நடவடிக்கைகள் எவையும் அரசினால் துரிதகதியில் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகும் கனவோடு ஏராளம் சிறுவர்கள் வாழும் இப்பகுதியில் தற்போது உருவாகி வரும் ஏனைய பிரச்சினைகளுக்கேனும் ஆரம்பத்திலேயே தீர்வு காணப்பட வேண்டும். 

மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பை கொட்டப்படுவதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஒருமித்து போராடாத நாம், தற்போது அப்பிரதேசத்தில் முளைவிடும் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கேனும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவும் எம்மொவ்வொருவரினதும் சமூகப்பொறுப்பாகவுமுள்ளது.