(எம்.எம்.மின்ஹாஜ்)

அமெரிக்க பிரஜையாக இருந்து கொண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபயவினால் போட்டியிட முடியாது. இந்நிலையில் தற்போது கோத்தாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமை நிராகரிக்க விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வாறாயின் பிரஜாவுரிமை நீக்கியதாக அமெரிக்காவினால் வழங்கப்படும் சான்றிதழை கோத்தாபய ராஜபக்ஷ நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் பிரஜாவுரிமை நீக்கியதாக உறுதிப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் சான்றிதழை இலங்கை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அதன் அனுமதியை பெற்றால் மாத்திரமே கோத்தாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். ஆகவே இது முற்றிலும் மக்களை ஏமாற்றும் வித்தையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமெரிக்கா பிரஜாவுரிமையை நீக்கிவிட்டு கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என உதய கம்மன்பில அறிவித்துள்ளார். அவருக்கு தெரிந்த சட்டங்கள் தொடர்பில் நாடே நன்றாக புரிந்துக்கொண்டுள்ளது. ஆகவே அவருடைய பேச்சுகளை கணக்கில் போட்டுக்கொள்ள தேவையில்லை.

அமெரிக்க பிரஜையாக இருந்து கொண்டு இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபயவினால் போட்டியிட முடியாது. அப்படியாயின் கோத்தாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நிராகரிக்க வேண்டும்.

இதன்பிரகாரம் தற்போது கோத்தாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமை நீக்க கோரி விண்ணப்பித்துள்ளார். அமெரிக்கா ஒருவரது பிரஜாவுரிமையை நீக்கினால் சான்றிதழ் ஒன்றை வழங்கும்.

அவ்வாறாயின் பிரஜாவுரிமை நீக்கியதாக அமெரிக்காவினால் வழங்கப்படும் சான்றிதழை கோத்தாபய ராஜபக்ஷ நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் உயர்நீதிமன்றத்திடமும் ஒப்படைக்க வேண்டும். அதன்பின்னர் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தும் பட்சத்தில் மாத்திரமே கோத்தாபய ராஜபக்ஷவினால் தேர்தலில் போட்டியிட முடியும்.