உள்ளூர் பழ உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியினை அதிகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

தலவில பிரதேசத்தில் உள்ள கிராமசக்தி உற்பத்தி கிராமத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மக்களுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியிடம் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்கள் தெரிவித்தனர். 

நீர்த்தட்டுப்பாடு, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள், பாதை வசதிகள், விவசாய உபகரண தட்டுப்பாடுகள் மற்றும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பன அவற்றில் முக்கியமானவை. 

பிரதேசத்தில் நிலவும் மின்சக்தி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படு மெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இதனுடன் தொடர்பான சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு மின்வலு அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவொன்றினை ஒரு வார காலத்திற்குள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். 

அத்துடன் தமது பழ உற்பத்திகளுக்கு உரிய விலைகளை பெற்றுக்கொள்ள முடியாமை தொடர்பாக இதன்போது பிரதேச பழ உற்பத்தியாளர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், பழங்களின் இறக்குமதியினால் தமது தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டனர். 

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பழங்கள் மற்றும் விவசாய உற்பத்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 

அதற்கமைய உள்நாட்டு பழ உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் தலவல பிரதேசத்தில் கிராம சக்தி மக்கள் சங்கத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் முதலாவது தவணை கொடுப்பனவு இதன்போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. 

உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்தின் கீழ் விவசாய திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட தலவில சூரிய சக்தி திட்டத்தையும் ஜனாதிபதி இதன்போது பார்வையிட்டார். 

அதன் பின்னர் மொஹத்துவாரம் உற்பத்தி கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மொஹத்துவாரம் சிங்கள மகா வித்தியாலயத்தில் மக்களை சந்தித்தார், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவற்றிற்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 

பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் புத்தகங்களும் இதன்போது வழங்கப்பட்டன. 

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டார நாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மாகாண அமைச்சர் சுமல் திசேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே நோய்க்காரணி இனங்காணப்படாத நாட்பட்ட சிறுநீரக நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் புளிச்சாக்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு உபகரணத் தொகுதியையும் ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார். 

இதற்கான மொத்த செலவு 2.2 மில்லியன் ரூபாவாகும். 

அமைச்சர் ரவுப் ஹக்கீம், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்ரசிறி வித்தான ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.