வடக்கு மாகாணத்தில் மத்திய அரசாங்கம் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது . குறிப்பாக மாகாண சபையை புறந்தள்ளி தன்னுடைய திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தனிக்கின்றதாக வடக்கு மாகாண  கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

 வடக்கு மாகாண சபையின் 124 ஆவது அமர்வு  கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது  மத்திய அரசினால் உருவாக்கப்படுகின்ற மீள்குடியேற்றச் செயலணி மற்றும் வடக்கு அபிவிருத்தி குழு என்பன குறித்து கருத்து வெளியிடுகையிலையே அவர் இதனைத் தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்..

மத்திய அரசின் இத்தகைய செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்பதுடன் இது நல்லாட்சியுமல்ல , ஐனநாயகமுமல்ல  அரசின் செயற்பாடுகளை அந்த அரசே மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் .

வடக்கு மாகாண அபிவிருத்தி என்பது மாகாண சபையும் மத்திய அரசும் இணைந்து செய்ய வேண்டும். அதனை விடுத்து மாகாண அரசைப் புறந்தள்ளி  வெறுமனே மத்திய அரசாங்கம் தாம் நினைத்தது போன்று செயற்பட முடியாது. இங்கு மாகாண சபை இருக்கின்ற போது எங்களுக்குத் தெரியாமலே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அத்தகைய நடவடிக்கைகைள்  ஊடகங்களில் பார்த்தே நாங்கள் அறிந்து கொள்ளும் நிலையும் இருக்கின்றது.

எனவே மாகாண சபையைப் புறந்தள்ளி மத்திய அரசாங்கம் செயற்படுகின்றமையை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். ஆகவே மாகாண சபைக்குத் தெரியப்படுத்தி மாகாண சபையுடன் இணைந்தே மத்திய அரசாங்கம் வடக்கில் அபிவிருத்தியானலும் வேறு எதுவானாலும் செய்ய வேண்டும் என்றார்.