எம்.எம்.மின்ஹாஜ்

"ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த முரண்பாடுகளை தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இதன்படி 2020 ஆம் ஆண்டு எமது ஆட்சியை உருவாக்குவோம். அதுமாத்திரமின்றி நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அடுத்த தேர்தலுக்கான போராட்டத்திற்குள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கி விட்டது" என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவில் உட்பூசல்கள் அனைத்தும் தற்போது சமூகத்திற்கு மத்தியில் வெளிப்பட்டு விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குருநாகலில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"நல்லாட்சியின் ஊடாக நாட்டின் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. தற்போது அரசாங்க தலைவர்களை கூட விமர்சனம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கான சுதந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். 

அத்துடன் ஊடக சுதந்திரத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் மீது ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன. 

இந்நிலையில் தற்போது நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவில் உட்பூசல்கள் அனைத்தும் தற்போது சமூகத்திற்கு மத்தியில் வெளிப்பட்டு விட்டது. பிரதி சபாநாயகர் தெரிவின் போது கூட்டு எதிர்க்கட்சிக்குள் நிலவும் பிளவு வெளிப்பட்டு விட்டது. 

ஐக்கிய தேசியக் கட்சியிலும் பல முரண்பாடுகள் காணப்பட்டன. அதனை நாம் தற்போது நீக்கியுள்ளோம். எனவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியை 2020 ஆம் ஆண்டு உருவாக்குவோம். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அடுத்த தேர்தல் போராட்டத்திற்குள் நாம் களமிறங்கி விட்டோம்." என்றார்.