(எம்.மனோசித்ரா)

நட்புணர்வுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு தொடர்பில் ஊடகங்களில் பல்வேறுபட்ட வகைகளிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணிகாலம் நிறைவடைந்து நாடு திரும்பும் அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். 

குறித்த சந்திப்பின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது மற்றும் சீனாவில் அவர் கற்றுக்கொண்ட விடயங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. 

ஆனால்  அவ்வாறு எதுவும் பேசவில்லை என  தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க தூதுவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகக் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையிலான சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 

குறித்த சந்திப்பின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன்,  துணைத் தூதுவராலயத் தலைவர் ரொபர்ட் ஹில்டனும் மற்றும்  முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதித் லொகுபண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.