கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் குறைந்த நிதியொதுக்கீடுகளில் வழங்கப்பட்ட வீட்ட;த்திட்டங்களைப் பூரணப்படுத்துவதற்கும் சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென பிரதேச பொதுஅமைப்புக்கள் கோரியுள்ளன.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச  செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் அமைந்துள்ள வீட்டுத்திட்டத்தின் அதிகளவான வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

கடந்த 2010ம் ஆண்டிற்குப் பின்னர் காணிகளற்ற குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு அவற்றில்  மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில்  வழங்கப்பட்ட நூறு வீடுகளும் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன.

அதேபோல மீள்குடியேற்றத்தின் பின்னர் ''நேப்" வீட்டுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளில் அதிகளவான வீடுகள் முழுமைப்படுத்தப்படாது காணப்படுகின்றன.

அத்துடன், இந்திய அரசின் நிதியுதவியுடன் புளியம்பொக்கணை முசிலம்பிட்டி பகுதியில் வழங்கப்பட்ட மாதிரி வீட்டுத் திட்டங்களில் பல வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்படுகின்ற வீடுகளை புனரமைத்துத் தருமாறும் பூரணப்படுத்தப்படாத வீடுகளை பூரணப்படுத்துவதற்கான நிதியுதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் பிரதேச பொதுஅமைப்புக்கள் கோரியுள்ளதுடன், கண்டாவளைப் பிரதேசத்தில் ஏராளமான குடும்பங்கள் வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றன. எதிர்காலத்தில் இவர்களுக்கான  வீட்டுத்திட்டங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பிரதேச பொதுஅமைப்புக்கள் கோரியுள்ளன.