(நா.தினுஷா)

நாட்டில் தற்போது ஜனநாயக முதிர்நிலை ஆட்சியே காணப்படுகின்றது. எனினும் கோத்தபாயவை ஜனாதிபதியாக்கி இராணுவமயமாக்கப்பட்ட சர்வாதிகர ஆட்சியை உருவாக்கவே சிலர் முயற்சித்து வருகின்றனர் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற உடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த ஆட்சியில் சட்டம் இரண்டு வழிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன. சாதாரண பொதுமக்களுக்கு புத்தகத்தில் உள்ள சட்டம் கடுமையாக்கப்பட்டது. ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பவும் சட்டம் வேறு வகையில் பயன்படுத்தப்பட்டது. 

இன்று அலோசியஸிடமிருந்து பணம் பெற்றவர்கள் குறித்து பேசுபவர்கள் மக்கள் நிதியை சூறையாடியவர்களை மறந்து விட்டனர். 

ஊழல்வாதிகளை கைதுசெய்யவில்லை என அரசாங்கத்துக்கும் அரச தலைவர்களுக்கும் எதிராக இன்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. இருப்பினும் தேசிய அரசாங்கம் ஒருபோதும் சட்டத்தை கையில் எடுத்து செயற்படாது, புத்தகத்திலுள்ள சட்டத்தை சுயாதீனமாக நடைமுறைப்படுத்தும்.

எனவே எஞ்சியுள்ள இரண்டரை வருடத்திற்குள் மக்கள் நிதியை சூறையாடிய அனைத்து ஊழல்வாதிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றார்.