மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 12ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை மேற்கொள்வதற்காக யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று  குறித்த அகழ்வு பணிகள் 12ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

 மனித எலும்புக்கூடுகள் அகழ்வுபணியை  மேற்கொள்வதற்காக களனி பல்கலைகழக தொல்பொருள் அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையத்தின்  நான்கு வைத்திய அதிகாரிகளும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவரும் இரண்டாவது நாளாக இணைந்து கொண்டு செயல்படுகின்றனர்.

இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார்  மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 அண்மைக்காலமாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகளில் மனித வளம் குறைவாக காணப்பட்டதை தொடர்ந்து இன்றைய அகழ்வு பணிக்காக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலைய வைத்திய அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த அகழ்வு பணிகளானது குறித்த கட்டடத்தின் நுழைவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தற்போது அகழ்வு பணிகள் குறித்த கட்டடத்தின் மத்திய பகுதியிலும் இடம் பெற்று வருகின்றது . இங்கும் புதிதாக மனித எலும்பு கூடுகள் தென்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.