(இராஜதுரை ஹஷான்)

பாரிய மோசடியின் முக்கிய தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்துவதை விடுத்து அரசாங்கம் அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றோர் தொடர்பில் கவனம் செலுத்தி வருவது பயனற்ற செயற்பாடாகும் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு கொண்டு வந்தால்  அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை கண்டு விடலாம். மத்திய வங்கியின் ஆளுநர்  நியமனம் தொடர்பில் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க    அர்ஜுன மகேந்திரனை பரிந்துரை செய்தபோது அமைச்சரவையில் உள்ள அனைத்து  உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ஜுன மகேந்திரனின் விவகாரத்தினை தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்ப்பதாக குறிப்பிட்ட பின்னர் அர்ஜுன மகேந்திரனுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.  

ஆனால் தற்போது அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் தனக்கு எவ்வித தகவல்களும் தெரியாது என்று பிரதமர் குறிப்பிடுவது அவரது பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்துகின்றது. 

அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் கைதிகள் பறிமாற்றம் உடன்படிக்கையினை கொண்டு வந்து அதனூடாக பிணைமுறியுடன் சம்பந்தப்பட்ட  குற்றவாளகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்.

ஆனால் அரசாங்கம் அர்ஜுன மகேந்திரனை  இலங்கைக்கு கொண்டு வருவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது தேவையற்ற விடயங்கள் மேல் அக்கறை செலுத்தி வருகின்றது என்றார்.