(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் 10 வருட கால ஆட்சியில் 7 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் பெறப்பட்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருட காலத்திற்குள் 4 ட்ரில்லியன் ரூபா கடனை பெற்றுள்ளது. ஆகவே கடன் பெறும் சாதனையினை பிரதமர் முறியடித்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

வஜிராம விகாரையில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை பொறுப்பேற்க்கும் போது வெளிநட்டுக் கடன் தொகை 2 ட்ரில்லியன் ரூபாவாகவே காணப்பட்டது. ஆனால் 2014 ஆம் ஆண்டு அப் பெறுமானம் 7 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்தது. எனினும் அவரது ஆட்சியின் போது நாட்டில் பல்வேறு பொருளாதார அபிவிருத்திகள் இடம்பெற்றன.

ஆனால் 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மூன்று வருட காலத்திற்குள் 4 ரில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனை பெற்றுள்ளதுடன் கடன்களை மீள் செலுத்துவதற்காக வரியினை அதிகரிக்கின்றோம் என்று குறிப்பிடுகின்றமை வியப்பிற்குரியதாகவே உள்ளது. இருப்பினும் இதுவரை காலமும் கடன்களை மீள் செலுத்தியதாக தெரியவில்லை.

இந் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வரி அதிகரிப்பு குறித்து பேசும் போது தேசிய அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது வழமையான செயற்பாடாக  மாறிவிட்டது.

அரசாங்கம் தற்போது ஏற்படுத்தியுள்ள பொருளாதார  வீழ்ச்சியினை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பினை ஏற்கும் அரசாங்கமே எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தோற்றம் பெறும் என்றார்.