தமிழ்நாடு – கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் பகுதியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரசப்பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதான குறித்த அரச பாடசாலை ஆசிரியர் 4ஆம் வகுப்பில் கல்வி கற்று வரும் மாணவிக்கு கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஒரு வார காலமாக ஆசிரியரின் தொல்லையை அனுபவித்து வந்த குறித்த மாணவி நேற்று காலை தனது பெற்றோரிடம் ஆசிரியரின் செயல் குறித்து தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலையை முற்றுகையிட்டு குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாடசாலை நிர்வாக அதிகாரிகள் ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மேலும் முறையாக சம்பவம் குறித்து பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும் என பொலிஸாரால் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டதையடுத்து மாணவியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய வழக்குப் பதிவு செய்த பொலிஸார் தலைமறைவாகியிருந்த குறித்த ஆசிரியரை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.