(இரோஷா வேலு) 

லண்டனில் இயங்கும் ஊடகமான லங்கா ஈநியுஸ் இணையத்தளம்  குறித்து ஜூன் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட செய்தியானது முற்றுமுழுதாக தவறானது என ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

லண்டனில் இயங்கும் ஊடகமான லங்கா ஈநியுஸ் இணையத்தள ஆசிரியரை கைதுசெய்து நாடு கடத்துமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக பிரபல ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தார் பற்றி அவதூறான கட்டுரைகளை வெளியிட்டிருந்தமையால் லங்கா ஈநியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் பிரதீப் சந்தறுவானை கைதுசெய்து நாடு கடத்த கோரி, பிரித்தானிய உயர்ஸ்த்தானிகராலயத்திற்கு தொடர்பு கொண்டு அரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஜனாதிபதி உரையாற்றியிருந்ததாக,  கடந்த ஜூன் 10 ஆம் திகதி பிரபல பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இச்செய்தியானது முற்றும் முழுதாக தவறானது என ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது. 

குறித்த பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியில், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரை பற்றி அவதூறான கட்டுரைகளை வெளியிட்டிருந்தமை தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லங்கா ஈ நியூஸ் இலங்கையில் முடக்கப்பட்டிருந்தது. எனினும் இந்நிறுவனமானது லண்டனில் இருந்து இயங்குவதனால் இதனை சர்வதேச ரீதியில் முடக்கமுடியாமலுள்ளது. 

குறித்த இணையத்தளத்தை முடக்குவதற்கான ஜனாதிபதி செயலகத்தினால் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து தலைமைத் தாங்கியிருந்தார். 

கடந்த ஜனாதிபதி மஹிந்தவின் நிர்வாகத்தின் போது தனக்கு உயர் அச்சுறுத்தல் இருந்தமையால் லங்காஈநியூஸின் ஆசிரியர் பிரதீப் சந்தறுவான் கடந்த ஆட்சியின் போதே லண்டனுக்கு சென்றிருந்தார். 

இந்நிலையிலேயே அவர் அங்கிருந்து குறித்த இணையத்தளத்தை நடத்திச் செல்கையிலேயே இவ்வாறு தற்போதைய ஜனாதிபதி குறித்து அவதூறு கட்டுரைகளை வெளியிட்டமையால் ஜனாதிபதி மைத்திரியினால் நாடு கடத்த கோரப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.