மிஹிந்தலை நகரிலுள்ள காணித்துண்டொன்றை விற்பனை செய்வதாகக் கூறி புசல்லாவ பகுதி வியாபாரி ஒருவரை மிஹிந்தலை நகருக்கு வரவழைத்து அவரை கூரிய கத்தியொன்றைக் காட்டி பயமுறுத்தி அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்னாயக்க தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்த முறைப்பாடொன்றின் அடிப்படையில் மஹவிலச்சி மானிங்கமுவ மற்றும் அநுராதபுரம் பிள்ளையார் சந்தி பகுதிகளைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சிலமாதங்களுக்கு முன் கொழும்பிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற வேளையில் நண்பராகிய பாதிக்கப்பட்ட புசல்லாவ பகுதி வியாபாரியிடம் மிஹிந்தலை பிரதேசத்தில் பெறுமதிமிக்க காணியொன்றை 5 இலட்சம் ரூபாவுக்கு விற்கவுள்ளதாகக் கூறி இப்பகுதிக்கு வரவழைத்து காணியை பார்வையிடச் செல்லும் பாசாங்கில் வியாபாரியை ரம்பாவ குளப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூரிய கத்தியொன்றைக் காட்டி அவரிடமிருந்த 5 இலட்சம் ரூபாவையும் அபகரித்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.