(எம்.நியூட்டன்)

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை வெளியேறக் கோரி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டோர்  எழுப்பிய கோஷத்திற்கிணங்க மாவை எம்.பி. போராட்டம் இடம்பெற்ற இடத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.

தென்னிலங்கை மீனவர்கள் வடக்கில் கடலட்டை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் நேற்று திங்கட்கிழமை யாழில் நடத்தியது. 

இந்த போராட்டத்தில் கடைகளை பூட்டுமாறும் அனைத்து அரசியல் கட்சியினரையும் கலந்துகொள்ளும்மாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந் நிலையில் இப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோனாதிராஜா வருகை தந்து சம்மேளனத்தின் அலுவலகத்தில் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். 

இதன்போது அங்கிருந்த சிலர் அரசியல்வாதிகள் எமது போராட்டத்திற்கு தேவையில்லை. இது கடற்தொழிலாளர்களாலே ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எந்த அரசியல்வாதிகளும் தேவையில்லை என தெரிவித்ததுடன் மாவை  எம்.பியை  வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து மாவை சேனாதிராஜா அவ்விடத்தில் இருந்து வெளியேறிச் சென்றிருந்தார்.