(எம்.மனோசித்ரா)

தபால் நிலையங்களுக்கான உப பொறுப்பதிகாரிகளை நியமித்தல் மற்றும் சேவைக்கு பணியாளர்களை இணைத்துக் கொள்ளல் போன்வற்றில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை ஊழியர்கள் சங்க செயற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையின் படி தபால் சேவைக்கான பணியாளர்ளை சேர்த்துக் கொள்ளல் மற்றும் உப தபால் அதிகாரிகளை நியமித்தல் போன்வற்றில் முறையான நடைமுறைகள் பின்பற்றபடுவதில்லை. தபால் சேவையின் முதலாம் இரண்டாம் தர உத்தியோகத்தர்கள் தகுதி அடிப்படையிலேயே இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறு நியமனங்கள் வழங்கப்படுவதில்லை. அவற்றில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன. 

மேலும் தபால் சேவை கனிஷ்ட பிரிவில் 18 தொகுதிகள் தற்போது காணப்படுகின்றன. அவை அனைத்தையும் தற்போது ஒன்றிணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு 18 தொகுதிகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் அவற்றிலுள்ள பழைய பணியாளர்கள் பாதிக்கப்படுவதோடு அவை அனைத்தையும் ஒன்றாக முகாமைத்துவம் செய்வதும் இலகுவான காரியமல்ல. 

எனவே இவ்வாறு சுமார் 11 வருடங்களாக தீர்வு காணப்படாமலிருக்கின்ற தபால் சேவையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை நாடளாவிய ரீதியிலான எமது பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என்றார்.