(எம்.சி.நஜிமுதீன்)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கூட்டணியொன்றை இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்குவாரானல் அவருக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவு வழங்காது என அக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் தீர்ப்புக்கு அஞ்சியே இன்று நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களை பிற்போடுவதில் அக்கறை காட்டுகின்றது. மக்களின் ஜனநாயக பண்புகளில் ஒன்றான தேர்தலை இன்று மக்கள் போராடி பெற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆட்சியில் ஜனநாயகம் உரிய முறையில் பேணப்பட்டு வந்தது. அதனால்தான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் காரணத்தினால் நாட்டில் தற்போது சர்ச்சை மிகுந்த நெருக்கடிநிலை உருவாகியுள்ளது. இந் நிலை இன்னும் தொடர்ந்தால் மக்கள் மேலும் இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என்றார்.