இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை கேலிக் கூத்தானதென இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ் அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் முதலில் இருபதுக்கு - 20 போட்டித் தொடரும், அதன்பின் ஒருநாள் போட்டித் தொடரும், இறுதியில் டெஸ்ட் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது. 

இருபதுக்கு -  20 போட்டித் தொடர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.  ஒருநாள் தொடர் ஜூலை மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.  அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகின்றது.  

ஐந்து டெஸ்ட் போட்டிகளும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் செப்டம்பர்  மாதம் 11 ஆம் திகதி வரை 42 நாட்களில் இடம்பெறவுள்ளது. 

இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கடியான நிலையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர் முழுவதும் உடல் வலிமையுடன் விளையாடுவதற்காக ஜேம்ஸ அண்டர்சனுக்கு 6 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஜேம்ஸ் அண்டர்சன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜேம்ஸ் அண்டர்சன் மேலும் தெரிவிக்கையில்,

“ இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை கேலிக் கூத்தானது.

கடந்த இரண்டு வருடங்களாக  எனது தோள்பட்டையில் காயம் இருந்து வருகிறது. என்னால் சிறந்த வழியில் அதை பார்த்துக்கொள்ள முடியும். நான் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்ற தோள்பட்டையை வலுவாக்குவது அவசியம்.

42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது. இது ஏராளமான வகையில் மன அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அட்டவணையால் நான் லன்காஷைர் அணிக்கான சில போட்டிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.