(இராஜதுரை ஹஷான்)

அம்பாந்தோட்டை துறைமுகத்தின்  வெளிப்புறத்தில்  உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவு யாருக்கு சொந்தம் என்று தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு  இடம்பெற்று வருகின்றதாக பாராளுமன்ற உறுபபினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாந்தோட்டை துறைமுகத்தின்  வெளிப்புறத்தில்  உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவு யாருக்கு சொந்தம் என்று தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு  இடம்பெற்று வருகின்றன.

இதற்கு முழுப் பொறுப்பினையும் தேசிய அரசாங்கமே ஏற்க வேண்டும். சீன நிறுவனத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தினை கையளிக்கும் போது அரசாங்கம் எதிர் விளைவுகள் பற்றிய தூரநோக்க சிந்தனைகள் இல்லாமல் செயற்பட்டமையின் பெறுபேறுகளே தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

ஒரு நாட்டின் தேசிய வளங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படும். ஆனால் தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலப்பகுதியில் இருந்து தேசிய வளங்களை பிற நாடுகளுக்கு விற்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றது . 

இதனடிப்படையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீன நிறுவனத்திற்கு  விற்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். 

ஆனால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது. இரகசியமாக செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இதுவரை  காலமும் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

துறைமுகத்தினை சீன நிறுவனத்திற்கு வழங்கும் போது 79 சதவீத  உரிமையே  வழங்கப்பட்டது. ஆனால் தற்போது துறைமுகத்திற்கு வெளிப்புறத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை  தீவினை சீன  நிறுவனம்  உரிமை கோரியுள்ளது. 

இதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் மாத்திரமே ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று இலங்கை அரசாங்கமும், துறைமுக விருத்தி தொடர்பில் உருவாக்கப்படும்  தொழில்நுட்ப மற்றும் இதர விடயங்களில் உரிமை உண்டு என்று சீன நிறுவனம் குறிப்பிடுவதும் தற்போது  சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயத்தில் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான விதத்திலே செயற்பட்டு வருகின்றது. இதனை காரணம் காட்டி அரசாங்கம் சீன நிறுவனத்தினை ஏமாற்றும்  நிலைப்பாட்டிலேயே உள்ளது என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது . 

சீன நிறுவனம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சொந்தமான பகுதியில் துறைமுக அபிவிருத்தி பணிகளுக்காக செயற்கை தீவை உருவாக்கியது. தற்போது அரசாங்கம் அதனை வழங்க மறுப்பது பாரிய விளைவுகளின் ஆரம்பமாகவே காணப்படுகின்றது. உடன்படிக்கையினை காரணம் காட்டி  சீன நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.