அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன்னும் உச்சி மகாநாட்டுக்காக சிங்கப்பூர் வந்து சேர்ந்திருக்கும் நிலையில் சர்வதேச அரங்கில் இடம்பெற்றிருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய உச்சிமகாநாடுகள் குறித்து ஊடகங்களில் பெருவாரியான ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

நாளை ட்ரம்புக்கும் கிம்முக்கும் இடையேயான சந்திப்பு வடகொரிய தலைவர் ஒருவருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் இடையிலான முதல் முதலான உச்சிமகாநாடு என்ற வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டதாக விளங்கப்போகிறது.

உலகில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட  நாடாக இருக்கும் வடகொரியாவுடன் கடந்த காலத்தில் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தைகளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  ட்ரம்ப் - கிம் சந்திப்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும் சிக்கலானவையாக அமைந்த உச்சிமகாநாடுகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று சர்வதேச அரசியல் அவதானிகள் வர்ணிக்கிறார்கள்.

உச்சிமகாநாடுகள் முற்றுமுழுதாக வெற்றிகரமானவையாக அமையாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு  முன்னேற்றத்தைக்காண்பதற்கு தலைவர்களுக்கிடையிலான தனிப்பட்ட வேதியியல் மிகவும் எப்போதுமே முக்கியமான ஒரு காரணியாகும். அதன் அடிப்படையில் பார்க்கும்போது ட்ரம்பையும் கிம்மையும் விட உலகில் இன்று  மிகவும் வேறுபட்ட உணர்வுநிலையில் இருக்கக்கூடிய வேறு இரு தலைவர்களைக் காணமுடியாது.

 

உச்சிமகாநாடுகள் குறித்து றொபின் றைட் என்ற அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர் நேற்றைய தினம் ' த நியூயோக் ' பத்திரிகைக்காக எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும்  ' எனக்கு புதியதாகத் தெரிகின்ற ' தகவல் ஒன்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்.

 

அதாவது ' அமெரிக்காவின் முதல் 26 ஜனாதிபதிகள் - அவர்கள் பதவியில் இருந்த 120 வருடகாலத்தில் - ஒருபோதும் உச்சிமகாநாடுகளை நடத்தியதில்லை. பதவியில் இருந்த காலத்தில் அவர்களில் எவருமே் ஐரோப்பாக்குக்கூட பயணம் செய்ததில்லை.முதலாவது உலகமகா யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு  பாரிஸுக்குச் செனற வூட்ரோ வில்சன்தான் அத்திலாந்திக்கைக் கடந்து ஐரோப்பாவுக்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி.' எனக் குறிப்பிட்டுள்ளார்.