மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இறுதிநாளில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 277 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெறவேண்டியுள்ளதால் போட்டியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளின் போர்ட் ஒப் ஸ்பெயினில் இடம்பெற்று வருகின்றது.

இன்று போட்டியின் 5 ஆவது நாளாகும்.

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 414 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில் மேற்கிந்தியத்தீவுகள்சார்பாக டௌரிச் 125 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லகிரு குமார 4 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மல்2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று 229 ஓட்டங்களால் பின்னிலைபெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்ப்டத்தில் சந்திமால் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் குமின்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 229 ஓட்டங்களால் முன்னிலபெற்றிருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. 7 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தனது 2 ஆவது இன்னிங்சை இடைநிறுத்திக்கொண்டது.

இதையடுத்த இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 452 ஓட்டங்கள் மேற்கிந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் 4 ஆவது நாள் ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப்பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவரும் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களைப்பெற்று ஆடுகளத்திலுள்ளார். 

போட்டியின் இறுதிநாளான இன்று இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமானால் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 277 ஓட்டங்களைப் பெற வேண்டும். அல்லது  277 ஓட்டங்களுக்கு  மேற்கிந்தியத்தீவுகள் அணி இலங்கை அணியின்மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி போட்டியில் வெற்றிபெறுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்..