ஜேர்மனியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்குட்படுத்தி படுகொலை செய்த பின்னர் ஈராக்கிற்கு தப்பிச்சென்ற நபர் ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சுசனா மரியா பெல்ட்மன் என்ற 14 வயது சிறுமி கடந்த மாதம் காணாமல்போனமை ஜேர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த மே மாதம் 23 ம் திகதி சுசன்னா காணாமல்போயுள்ளமை குறித்து அவரது தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன் பின்னர் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது புகலிடக்கோரிக்கையாளர்கள் வாழும்பகுதியொன்றிற்கு அருகில் உள்ள சிறிய காட்டில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

பொலிஸார் சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்தனர்.

அதேகாலப்பகுதியில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட ஈராக்கினை சேர்ந்த 20 வயது அலி பசார் காணாமல்போயிருந்தார்.

குறிப்பிட்ட நபர் சிறுமியின் உடல் காணப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள முகாமில் வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் குறிப்பிட்ட நபரை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து அவர் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அலிபசார் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என ஈராக்கின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவரை பொலிஸார் ஜேர்மனிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சந்தேக நபர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்பது குறித்து மகிழ்;ச்சியடைந்துள்ளேன் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுமி கொலை செய்யப்பட்ட விடயம் ஜேர்மனி புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்து பின்பற்றும் கொள்கை பற்றிய விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.