வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ஆம் திகதி 8 மாத குழந்தை ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 09 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். 

வசுதரன் வானிஷன் என்ற குழந்தை, கடந்த 31ஆம்  திகதி வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் பலவந்தமாக நுழைந்த இனந்தெரியாத குழுவினால் கடத்திச் செல்லப்பட்டது. 

குழந்தையின் தந்தை லண்டனில் இருப்பதாகவும், தந்தைக்கும் தாய்க்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகவும், இந்த முரண்பாடு காரணமாக தந்தையின் குழுவினரால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று குழந்தையின் தாய் கூறினார். 

அதன்படி ஆரம்பிக்கப்பட்ட தேடுதலில் குழந்தை மீட்கப்பட்டதாகவும், குழந்தையின் தந்தை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் புலனாய்வாளராக இருந்துள்ளதாகவும், பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.