(நா.தனுஜா)

காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் எம்மிடம் உள்ளன. மீண்டும் விபரங்களை சேகரிப்பது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சலிப்படைய செய்யும். ஆகையினாலேயே நாம் தற்போது தகவல் சேகரிப்பில் ஈடுபடவில்லை. அத்தோடு ஒருபோதும் மக்கள் அதிருப்தியடையும் வகையில் செயற்பட மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தற்போது மக்களை சந்தித்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் அளித்தல் மற்றும் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னர் நிறுவப்பட்டிருந்த ஆணைக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதியின் கீழான செயற்றிட்டங்கள் என்பன மூலம் பெறப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன. எனவே மீண்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை தருமாறு அவர்களது உறவினர்களிடம் கோருவது அவர்களை சலிப்படைய செய்யும். அத்தோடு அவர்களை கவலையடையவும் நேரிடும். ஆகையினாலேயே நாம் இப்போது தகவல் சேகரிப்பில் ஈடுபடவில்லை. 

காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை இதற்கு முன்னர் எங்கும் பதிவுசெய்யாதவர்களுக்கு எதிர்வரும் சில மாதங்களில் விபரங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். மக்களின் நம்பிக்கையினை பொய்யாக்கும் வகையில் நாம் ஒருபோதும் செயற்பட மாட்டோம். இது ஒரு சுயாதீன ஆணைக்குழுவாகும். எனவே எமது அலுவலகத்தின் நடவடிக்கைகளை ஒரு முறைமையின் அடிப்படையிலேயே முன்னெடுக்க வேண்டும். எனவே அனைவரும் அதனை புரிந்துகொண்டு செயற்படுவது அவசியமாகும் என்றார். 

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இதுவரை மன்னார், மாத்தறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் மக்களுடனான சந்திப்பை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலை இந்துகலாசார மண்டபத்தில் மக்களுடனான அடுத்த சந்திப்பினை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.