காஸா எல்லைக்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 386 பேர் படுகாயமடைந்துள்ளனர் என மருத்துவ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஏஎவ்பி ஊடகவியலாளர் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவித்துள்ள மருத்துவ பணியாளர்கள் கண்ணீர் புகைபிரயோகத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நபர் ஒருவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கின்றார் என தெரிவித்துள்ளன.

நாங்கள் சந்திரனையோ சூரியனையோ கேட்கவில்லை எங்கள் பகுதிக்கு திரும்பிச்செல்வதற்கு எங்களிற்கு உள்ள உரிமையை உலகம் அங்கீகரிக்கவேண்டும் என்றே கேட்கின்றோம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காஸா எல்லையில் கற்கை எறிந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட 10,000 ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ள முயன்ற துப்பாக்கிதாரியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து தாங்கள் இழந்த தங்கள் பூர்வீக நிலங்களை கோரி பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.