விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகளிற்கான புனர்வாழ்வு முகாமிலிருந்து 2011 ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பின்னர் மாலதி படையணியை சேர்ந்த அந்த பெண்ணிற்கு தையல் இயந்திரமொன்றை இலங்கை அதிகாரிகள் வழங்கினார்கள்.

யுத்தத்தின் கடுமையான சூழ்நிலைக்கு பழக்கமாகி விட்ட, பதின்மவயதிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து  -ஏழு வருடங்கள் யுத்தத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணிற்கு தையலில் ஆர்வம் இருக்கவில்லை.

அதன் காரணமாக அவர் கோழிவளர்ப்பில் ஈடுபட்டார் ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

எனது குடும்பத்திற்கு நான் சுமையாகிவிட்டதை நினைத்து களைப்படைந்துவிட்டேன் என  35 வயதான அவர் தெரிவித்தார்.

எதிர்விளைவுகள், பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

ஒவ்வொரு முறையும் நான் வெளியில் செல்லும்போது அப்பாவிடம் காசு கேட்கவேண்டியுள்ளது, எனக்கு இந்த வாழ்க்கை தேவையில்லை விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்திருந்தால் நான் தற்போது தளபதியாகயிருந்திருப்பேன் என அவர் தெரிவித்தார்.

தமிழ்மக்களின் இறைமைக்கான விடுதலைப்புலிகளின் மூன்று தசாப்தகால  போராட்;டம் மே 2009 ம் ஆண்டு இரத்தக்களறியுடன் முடிவிற்கு வந்தது.

ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கையின் வடபகுதி நீண்ட யுத்ததம் மற்றும் மோசமான வன்முறைகளுடன் அது முடிவிற்குவந்ததனால் சிதைந்துபோனவற்றை  சேகரித்துக்கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண்போராளிகள் குழப்பமான மாற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.

தமிழர் தாயகம் மற்றும் பெண்விடுதலை என்ற கவர்ந்திழுக்க கூடிய வாக்குறுதிகள் காரணமாக பெருமளவு பெண்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தனர், விடுதலைப்புலிகள் அமைப்பில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக காணப்பட்டனர்.

எனினும் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் மீண்டும் பாரம்பரிய வாழ்விற்குள் சிக்குவதை தவிர அவர்;களிற்கு வேறு வழியிருக்கவில்லை.

பல வருடங்களாக ஆண் சகாக்களிற்கு சமமான நிலையில் காணப்பட்ட அவர்கள் தற்போது திருமணம் , பிள்ளைகள், வீட்டு வேலைகளை பூர்த்தி செய்தல் போன்ற எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை தவிர வேறு வழியில்லை என்கிறார் விடுதலைப்புலிகளின் கடற்பிரிவின் சிரேஸ்ட தளபதியொருவர்-அவர் தன்னை பற்றிய மேலதிக விபரங்களை வெளியிட விரும்பவில்லை.

1990களில் மோதல்களில் ஈடுபட்டவேளை  அவரது உடலை குண்டுச்சிதறல்கள் துளைத்துள்ளன, அவை அவரின் உடலில் இன்னமும் உள்ளன.( அவர் 12 வயதில் இணைந்தார்)

தோற்கடிக்கப்பட்ட போராளிகளை தடுத்து வைப்பதற்காக அரசாங்கம் ஏற்படுத்திய முகாமிற்கு  செல்வதை அவர் தவிர்த்துக்கொண்டார்,இதன் காரணமாக அவர் கண்காணிப்பின் கீழ் சிக்கும் நிலையை தவிர்த்துக்கொண்டார்.

யுவதிகளிற்கு நான் கராத்தே மற்றும் தற்பாதுகாப்பு கலை வகுப்புகளை ஆரம்பிக்க விரும்பினேன் ஆனால் எனது கணவர் தடுத்து விட்டார்  என தெரிவித்த அவர் நான் அவ்வாறான வகுப்புகளை ஆரம்பித்தால் எனது பின்னணி குறித்து அவர்களிற்கு சந்தேகம் வந்துவிடும் என அவர் குறிப்பிட்டார் எனவும் தெரிவித்தார்.

யுத்தத்தில் உயிர்தப்பியவர்கள் இன்று அங்கீகாரத்திற்காகவும்- நிரந்தர வருமானத்திற்காகவும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பெண்பேராளிகளின் சமூக பொருளாதார பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றார் சர்வதேச நெருக்கடி குழுவின்  இலங்கை குறித்த சிரேஸ்ட ஆய்வாளர் அலன் கீனன்;.

பெண்போராளிகள் பல்வேறு வகைப்பட்ட நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்,தீவிரமடைந்துள்ள வறுமை,பாலியல்துஸ்பிரயோகம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படும் ஆபத்து  போன்றவற்றை அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலையுள்ளது எனவும் அலன் கீனன்; தெரிவிக்கின்றார்.

இந்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் முழுமையான கொள்கையை வகுக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

முன்னாள் போராளிகள் பல்வேறுபட்ட குழப்பமான காரணங்களிற்காக  ஏனைய தமிழ்சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

முன்னாள் பெண்போராளிகளை பொறுத்தவரை 2009 தோல்வி, அவர்களை சமூக கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்த  இராணுவமயப்படுத்தப்பட்ட பெண்ணிலை வாதத்தை முடிவிற்கு கொண்டுவந்துள்ளது.

அவர்கள் தற்போது சேலைஅணியவேண்டியுள்ளதுடன் அவர்களை எப்போதும் மதிப்பிட தயாராகவுள்ள குடும்பத்தவர்கள் அயலவர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டியுள்ளது.

முன்னாள் பெண்போராளிகளுடன் அடிக்கடி தொடர்புகொள்ளும் பெண் அரசியல்வாதிகளில் ஒருவர் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்.

அவருடைய கணவரும் விடுதலைப்;புலிகள் இயக்கத்தில்  முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

வாழ்வாதார உதவிகேட்டு பல முன்னாள் பெண்போராளிகள் இவரை சந்திக்கின்றனர்.

பல முன்னாள் பெண் போராளிகள் கணவன்மாரோ அல்லது உரிய வேலையோ இல்லாத நிலையில் மிகவும் கடினமான வாழ்க்கை வாழ்கின்றனர் என தெரிவிக்கின்றார் அனந்தி சசிதரன்.

மேலும் தொடர்ந்தும் கண்காணிப்பு காணப்படுவதால் அவர்கள் தாங்கள் முன்னாள் போராளிகள் என்பதையும் மறைக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவர்கள் ஆடையணியும் விதம் காரணமாக அவர்களின் காயங்களை உங்களால் காண முடியாது, என தெரிவிக்கும் அனந்தி சசிதரன் அதேவேளை காயங்கள் காரணமாக அவர்களால் அதிகம் வேலைபார்க்க முடியாது எனவும் குறிப்பிடுகின்றார்.

முன்னாள் கடும் போக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ்  வடக்கில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன,- இவரே விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கும் காரணமானவர்.

எனினும் இந்த உட்கட்டமைப்பு திட்டங்களில் உள்ளுர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை என்கிறார் தேசிய சமாதானப்பேரவையின்  நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜெகான் பெரேரா

2015 இல் சிறிசேன அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களிற்கு பதில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்கின்றது இது வெற்றியளித்துள்ளது எனவும் குறிப்பிடுகின்றார்.

கண்ணிற்கு தெரியும் வகையிலான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன ஆனால் வறிய மக்களிற்கு இதன் நன்மைகள் சென்றடைகின்றனவா என்பதே கேள்வி எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

2001ம் ஆண்டு தனது 16 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட முன்னாள் கடல்புலி போராளியொருவர்  தனது கணவரின் கிராமத்தில் உள்ள சிறிய வீடொன்றில் வசிக்கின்றார்.

எனினும் ஒரு குடும்பபெண் என்ற அளவில் தன்னால் செய்ய கூடிய விடயங்கள் அங்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கடைகளில் விற்பதற்கு சிறிய உணவுப்பொருட்களை எப்படி செய்வது என நான் பழகிக்கொண்டேன்,ஆனால் தற்போது நான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன் என அவர் குறிப்பிடுகின்றார்.

33 வயதான அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

அவரின் காலில் குண்டு துளைத்ததால் ஏற்பட்ட  காயங்கள் உள்ளன. காலில் குண்டு சிதறல் இருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

2008 ம் ஆண்டு சிறிய அணியொன்றிற்கு வழிநடத்திய வேளை இந்த காயங்கள் ஏற்பட்டன.

அவரது கணவரும் மாற்றுத்திறனாளி-இதுவும் அவரிற்கு மேலதிக சுமை.

இரண்டாம் நிலை தளபதியாகயிருக்க எனக்கு விருப்பமில்லை என்கின்றார் அவர்.

குடும்ப வாழ்விற்கு திரும்பி மனைவியாக அம்மாவாகயிருப்பது கஸ்டமாக உள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

வோசிங்டன் போஸ்ட்

ஹொலி ரோபேர்ட்சன்

தமிழில் அ.ரஜீபன்