(இராஜதுரை ஹஷான்)

"நல்லிணக்கம் என்பது ஒரு ஆன்மீக தத்துவமாகும். ஆன்மீக விழுமியங்களை பொருட்படுத்தாத சமூகத்தில் நல்லிணக்கம் சார்ந்த இலக்குகளை அடைவது கடினமாகும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை எதிர் கொள்ள வேண்டும்"  என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக பணிப்பாளர் நாயகம்  எம். எஸ். ஜயசிங்க தெரிவித்தார் 

நேற்று கொழும்பில் நடைபெற்ற  நிகழ்வில் கலந்துக் கொண்டு  உரையாற்றும் போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும்,

தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது மக்களுக்கு நாட்டில் தேசிய நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தினை பேணுவது தொடர்பில் பல வாக்குறுதிகளை முன்வைத்தது. இதனை செயற்படுத்தும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் நல்லிணக்க கொள்கைகள் அரச மற்றும் தனியார்  நிறுவனங்களை முன்னிலைப்படுத்தி செயற்படுத்தப்பட்டு வருகின்றது. நல்லிணக்க ஆனணக்குழு  இதற்காக அமைச்சில் பிரத்தியேகமாக தனி தாபனங்களை உருவாக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது நாட்டில்  இனங்களுக்கிடையில் கருத்தொற்றுமை  இன்மையின் காரணமாக தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது . மறுபுறம் ஆயுதப்படையினரது தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்ற வண்ணமே உள்ளது நடைமுறையில் உள்ள சட்டங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. மக்கள் அனைவரும் இலங்கையர்கள்  என்ற நிலைப்பாட்டுக்குள் இருந்து ஒன்றுப்பட வேண்டும்.

நாடுதழுவிய ரீதியில் தேசிய ஒருமைப்பாட்டினை கொண்டு செல்ல வேண்டுமாயின் ஒரு வரைபடத்துடன் செயலாற்ற முன்வர வேண்டும்  இலங்கை சூழ்நிலையில் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பல் வகையான முறைமைகளை பயன்படுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளிலும்  இலங்கையின் எப்பக்கங்களிலுமோ உள்ள மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் பல்வேறு காரணிகளுடன் தேசிய ஒருமைப்பாட்டையும்  நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் செயன்முறை தங்கியுள்ளது." என தெரிவித்தார்.