(நா.தினுஷா)

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறை குறித்து தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டதும் இவ் வருடத்தின் இறுதிக்குள் கால எல்லை முடிவடைந்த அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த தயராகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் பதவிகாலமானது கடந்த 2017 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணசபைகளுக்குமான கால எல்லையும் நிறைவுக்கு வரவுள்ளது. ஆகவே மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துமாறுக் கோரி அழுத்தங்கள் எழுந்தவண்ணமே உள்ளன.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலானது புதிய முறையில் நடத்தப்பட்டது. இதனால் தேர்தல் முறைமையில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டோம். ஆகையால் மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய முறையில் நடத்த முடியாது. 

மாகாண சபைதேர்தலை நடத்தும் முறை தொடர்பில் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி, அனைவருக்கும் ஏற்ற வகையிலான தேர்தல் முறை தெரிவு செய்து இந்த ஆண்டின் இறுதிக்குள் தேர்தலை நடத்துவோம் என்றார்.